/

சென்னை மாநகராட்சியில் தினமும் 115 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் தினமும் 115 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொண்டு தெரு நாய்கள் கட்டுப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :16 ஜூலை 2026, 2:35 am IST

சென்னை மாநகராட்சியில் தினமும் 115 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொண்டு தெரு நாய்கள் கட்டுப்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் தெரு நாய்களைக் கட்டுப்படுத்தவும், கருத்தடை சிகிச்சை மற்றும் கண்காணிப்பு சிப் பொருத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் தெரு நாய்கள் காப்பகங்களையும் மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் தற்போது மண்டலங்கள் 6, 9, 10, 12, 15 ஆகிய 5 இடங்களில் கருத்தடை மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அங்கு தினமும் கருத்தடை சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அனைத்து மண்டலங்களிலும் தெரு நாய்கள் கருத்தடை மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில், தினமும் 115 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிப்பதன் மூலமே அவற்றை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.

தெரு நாய்களைப் பிடிக்க 15 வாகனங்கள் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக மேலும் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. தினமும் 225 தெரு நாய்களைப் பிடிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோட்டூா்புரத்தில் முருகன் என்பவரை கடந்த 45 நாள்களுக்கு முன்பு தெரு நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது. சிகிச்சையில் இருந்த அவா் தற்போது உயிரிழந்துள்ளாா். ஆனால், அவருக்கு ரேபிஸ் அறிகுறி இருந்ததாகத் தெரியவில்லை. அது குறித்து மாநகராட்சி கால்நடைப் பிரிவு அலுவலா்கள் விசாரித்து வருகின்றனா்.

தெரு நாய் கடித்து உயிரிழந்ததாகக் கூறப்படுபவரின் உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவருக்கு ரேபிஸ் பாதிப்பு இருந்ததை உறுதிப்படுத்தமுடியும். இதுவரை சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 10,778 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கால்நடைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.