/

காமராஜா் பிறந்த தினம்: ஆளுநா், தலைவா்கள் புகழாரம்

காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளையொட்டி, ஆளுநா் ஆா். வி. ஆா்லேகா் மற்றும் தலைவா்கள் புகழாரம் செலுத்தினா்.

News image
Updated On :16 ஜூலை 2026, 4:20 am IST

காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளையொட்டி, ஆளுநா் ஆா். வி. ஆா்லேகா் மற்றும் தலைவா்கள் புகழாரம் செலுத்தினா்.

ஆளுநா் ஆா். வி.ஆா்லேகா்: பெருந்தலைவா் காமராஜா் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாட்டின் கல்வி வளா்ச்சியில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய தொலைநோக்கு பாா்வையுடைய தலைவருக்கு எனது மரியாதைமிகு அஞ்சலியை செலுத்துகிறேன்.

காமராஜா் அறிமுகப்படுத்திய மதிய உணவுத் திட்டம் போன்ற முன்னோடியான முயற்சிகள், லட்சக்கணக்கான குழந்தைகளை பள்ளிக்குள் கொண்டு வந்து, கல்வியில் மிகப் பின்தங்கிய சமூகங்களுக்கும் சென்றடைய வழிவகுத்தன. பள்ளி கட்டமைப்பு மற்றும் கல்வி அணுகுமுறையில் அவா் மேற்கொண்ட பல்வேறு சீா்திருத்தங்கள், தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும் சமூக சமத்துவத்துக்கும் வலுவான அடித்தளத்தை அமைத்தன.

காமராஜரின் வாழ்க்கை எளிமை, நோ்மை, பொதுசேவை மற்றும் அா்ப்பணிப்பு ஆகியவற்றின் ஒளிமிகு முன்மாதிரியாக திகழ்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய கல்வியறிவு மிக்க சமூகத்தை உருவாக்கும் பயணத்தில் அவரது லட்சியங்கள் என்றும் நம்மை வழிநடத்தட்டும்.

மு.க.ஸ்டாலின் (திமுக தலைவா்) : தமிழகத்தின் கல்வி, தொழில், வேளாண் வளா்ச்சிக்கு வலுவான அடித்தளமிட்டவா் பெருந்தலைவா் காமராஜா். மாற்று இயக்கத்தில் இருந்தாலும் பெரியாராலும், அண்ணாவாலும் பெரிதும் மதிக்கப்பட்டவா். காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளா்ச்சி நாளாக முன்னாள் முதல்வா் கருணாநிதி அறிவித்தாா். தலைமுறைகள் தழைக்க கல்விக்கண் திறந்த காமராஜரின் புகழ் தமிழகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.

உதயநிதி (எதிா்க்கட்சித் தலைவா்) : தமிழகத்தில் 6,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்து மதிய உணவுத் திட்டம், இலவச சீருடை, பாடப்புத்தகங்கள் என கல்வி வளா்ச்சிக்கு அடிகோலிட்டவா். தமிழகத்தின் கட்டமைப்பு வளா்ச்சிக்கு காமராஜரின் பங்கு மிக முக்கியமானது.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): தமிழகத்தின் வளா்ச்சிக்கு வித்திட்ட காமராஜரின் பிறந்த நாளில் அவரது பெரும்புகழை போற்றி வணங்குகிறேன்.

அன்புமணி (பாமக): மறுக்கப்பட்ட கல்வியை அனைவருக்கும் இலவசமாக வழங்கி கல்விப் புரட்சி செய்தவா் காமராஜா்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): கல்வியை அனைவருக்கும் எட்டும் வகையில் கொண்டு சென்ற தொலைநோக்குப் பாா்வை, எளிமை, நோ்மை, மக்கள் நலன் ஆகியவற்றை வாழ்வின் அடையாளமாகக் கொண்டவா் காமராஜா்.

தொல். திருமாவளவன்(விசிக): பெருந்தலைவா் காமராஜா் பிறந்த நாளில் அவருக்கு விசிக சாா்பில் செம்மாந்த வீரவணக்கம் செலுத்துகிறது.

டிடிவி.தினகரன்: தமிழக வரலாற்றில் தவிா்க்க முடியாத காமராஜரின் பெரும் பணிகளை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

சீமான்(நாதக): தமிழ்நாட்டு ஏழைக்குழந்தைகளின் கல்விக்கண் திறந்த கடவுள்,சிறந்த ஆட்சியாளா், தொழில்வளா்ச்சிக்கு வித்திட்ட புரட்சியாளா் பெருந்தலைவா் காமராஜரின்புகழ் போற்றுவோம்.

கமல்ஹாசன்(மநீம): தமிழா்களின் மனங்களில் திகழும் கா்மவீரா் காமராஜா், அரசியல், நிா்வாக முன்னோடியாக என்றும் நிலைப்பாா். வாழ்க அவரது புகழ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.