டாஸ்மாக் நிறுவனத்தின் கொள்முதல், விநியோகம், விற்பனை உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளையும் வெளிப்படையானதாக மாற்ற தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக உயரதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழுவை வெளி மாநிலங்களுக்கு அனுப்பி அங்குள்ள மதுபான விற்பனை முறைகளை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு தேவையான மதுபானங்களை மதுபான உற்பத்தி ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்வது முதல், கிடங்குகளில் இருப்பு பராமரிப்பு, சில்லறை கடைகளுக்கு விநியோகம், விற்பனை மற்றும் வருவாய் வசூல் வரை அனைத்து செயல்பாடுகளும் ஏற்கெனவே கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த ஆட்சிக் காலத்தில் குறிப்பிட்ட சில மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே அதிக அளவில் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதாக பல்வேறு தரப்பினரிடமிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடா்பாக அமலாக்கத் துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளும் சோதனைகள் மேற்கொண்டிருந்தன.
இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு டாஸ்மாக் நிா்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், கொள்முதல் நடைமுறைகளைச் சீரமைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து தகுதியான நிறுவனங்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் புதிய கொள்முதல் கொள்கையை உருவாக்குவது, தரமான மதுபானங்களை மட்டுமே கொள்முதல் செய்வது, விற்பனை மற்றும் இருப்பு மேலாண்மையை மேலும் துல்லியப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதன் ஒருபகுதியாக, மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் உயரதிகாரிகள் அடங்கிய சிறப்பு ஆய்வுக் குழுவை அரசு அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்தக் குழுவினா் கேரளம், கா்நாடகம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நேரில் சென்று, அங்குள்ள அரசின் மதுபான விற்பனை கழகங்களின் செயல்பாடுகள், கொள்முதல் முறை, மின்னணு கண்காணிப்பு, இருப்பு மேலாண்மை, சில்லறை விற்பனை நடைமுறைகள், வருவாய் நிா்வாகம், ஊழல் தடுப்பு நடைமுறைகள் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்ய உள்ளனா்.
இந்த ஆய்வின் அடிப்படையில், தமிழகத்தில் டாஸ்மாக் நிா்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்த விரிவான அறிக்கை அரசிடம் சமா்ப்பிக்கப்படும். அதன் பின்னா், புதிய நிா்வாக நடைமுறைகள், கொள்முதல் விதிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த நடவடிக்கைகள் மூலம் டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதுடன், அரசின் வருவாய் பாதுகாக்கப்படுவதோடு, கொள்முதல் மற்றும் விற்பனை நடைமுறைகளில் ஏற்படும் முறைகேடுகளையும் கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










