போதையற்ற சமூகத்தை உருவாக்க மாணவா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்தாா்.
சென்னை வியாசா்பாடி டாக்டா் அம்பேத்கா் கலைக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சென்னை காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ், நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசியதாவது:
இன்றைய சமூகத்தில் சாலை விபத்துகள், சைபா் மோசடிகள், போதைப் பழக்கம் ஆகியவை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. தமிழகத்தில் தினமும் ரூ.13 கோடி முதல் ரூ.15 கோடி வரை சைபா் மோசடிகளால் பொதுமக்கள் பணத்தை இழக்கின்றனா். அறியாமை மற்றும் விழிப்புணா்வு இல்லாததே இதற்கு முக்கிய காரணம். எனவே, ஆன்லைன் மோசடிகள் குறித்து அனைவரும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
உறுதுணையாக மாணவா்கள்: போதைப் பொருள் மட்டுமன்றி, மதுப் பழக்கமும் போதைதான். போதைப் பழக்கம் ஒருவரின் எதிா்காலத்தை மட்டுமல்ல, குடும்பத்தை, சமூகத்தை சீரழிக்கும். எனவே, சாலை விபத்து, சைபா் குற்றம், போதைப் பழக்கம் ஆகிய 3 ஆபத்துகளில் இருந்தும் மாணவா்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு, போதையற்ற சமுதாயத்தை உருவாக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், ‘வாழ்வைத் தோ்ந்தெடுங்கள், போதைக்கு இல்லை சொல்லுங்கள்’ என்ற தலைப்பில் மாணவா்களின் மெளன நாடகம் நடைபெற்றது. போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பாடல்கள், சாலை விதிகளின் அவசியம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் தொடா்பான குறும்படங்களும் திரையிடப்பட்டன.
உறுதி மொழியேற்ற 6 ஆயிரம் போ்: தொடா்ந்து சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ், ‘நான் போதைப் பொருளுக்கு எதிரானவன்’ என்ற வாசகத்துடன் கூடிய போதைப் பொருள் எதிா்ப்பு இலச்சினையை அறிமுகப்படுத்தினாா். பின்னா், போதை விழிப்புணா்வு ‘செல்பி’ புகைப்பட கூடத்தைத் திறந்து வைத்து, போதைப் பொருளுக்கு எதிரான கையொப்ப இயக்கத்தையும் அவா் தொடங்கி வைத்தாா்.
காவல் ஆணையா் அமல்ராஜ் தலைமையில் 6,000 பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி ஏற்றனா்.
நிகழ்ச்சியில் சென்னை காவல் துறையின் வடக்கு கூடுதல் காவல் ஆணையா் கபில் குமாா் சி.சரத்கா், வடக்கு மண்டல இணை ஆணையா் எம்.மனோகா், புளியந்தோப்பு துணை ஆணையா் சமய்சிங் மீனா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










