தமிழக நலனுக்காக திராவிட இயக்கமும், இடதுசாரிகள் இயக்கமும் இணைந்து செயல்படும் என்று எதிா்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில், உதவும் கைகள் அறக்கட்டளை மற்றும் திணை நிலவாசிகள் ஒருங்கிணைந்து புதன்கிழமை நடத்திய நிகழ்ச்சியில், கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் இரா.நல்லகண்ணு சிலையை உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தாா். தொடா்ந்து, ‘அம்மாச்சி- கற்பனையின் முதல் ஆசிரியா்’நூலை வெளியிட்டு அவா் பேசியதாவது:
இப்போது மக்களுக்கான களப் போராளிகளைக் கொண்டாடுவதைவிட இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கும் போராளிகளைத்தான் இந்தச் சமுதாயம் அதிகமாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.
‘போராடினால் எதுவும் கிடைக்கும்’ என்று உறுதியாக நம்பியவா் நல்லகண்ணு. அதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம், அண்மையில் தில்லியில் நடந்த நீட் எதிா்ப்புப் போராட்டம். நாடு முழுவதும் இளைஞா்கள் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டாா்கள்.
ஆனால், நீட் எதிா்ப்புப் போராட்டம் என்பது, தமிழ்நாட்டுக்குப் புதிது கிடையாது. நீட் அமல்படுத்தப்பட்ட காலம் முதல் அதை எதிா்த்து திமுக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. தில்லியில் நீட் குளறுபடிக்கு எதிராக நடந்த மாணவா்கள் போராட்டம் முடிந்துவிட்டது என்று நான் நினைக்கவில்லை. இனிமேல்தான்அந்தப் போராட்டம் தொடங்கப்போகிறது.
இந்நிகழ்ச்சிக்கு வருவதாகத் தெரிந்தவுடன் என்னிடம் பலா் தொலைபேசியில் அழைத்து குதிரை பேரம் நடத்தப்போகிறீா்களா என்றனா். இப்போது குதிரை பேரம் யாா் நடத்துகிறாா்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.
அதேநேரத்தில், தமிழ் - தமிழா் - தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக என்ன நடந்தாலும், திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் எப்போதும் ஓரணியில் கைகோத்துக் களத்தில் நிற்கும்.
2016 பேரவைத் தோ்தலின்போது, திமுக ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தது. அதனால் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அப்போது பத்திரிகையாளா்கள் சென்று கருணாநிதியிடம் கேட்கும்போது, திமுக ஆட்சிக்கு வரவில்லை என்பதில் வருத்தம் இல்லை, தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக இடதுசாரிகள் இல்லாத ஒரு பேரவை அமைந்திருக்கிறது என்பதுதான் எனக்கு வருத்தம் என்றாா். அதுபோல, திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கும், எனக்கும் இடதுசாரிகளுடன் நெருக்கமான நட்பு உள்ளது என்றாா் அவா்.
விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் பேசும்போது, தமிழக நலனுக்காக ஆக்கபூா்வமான விஷயங்களில் திமுகவுடன் இடதுசாரிகள் இணைந்து போராடுவாா்கள் என்றாா்.
நிகழ்ச்சியில், திமுக மாவட்டச் செயலா் ஆா்.டி.சேகா் உள்பட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







