கோடை வெயில், டீசல் விலை உயா்வு காரணமாக சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. குறிப்பாக, ஒரு கிலோ பீன்ஸ் ரூ.120-க்கு விற்பனையானது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமன்றி கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் சுமாா் 700 முதல் 800 லாரிகளில் 10 ஆயிரம் டன்களுக்கும் அதிகமான காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
ஆனால், கடந்த சில வாரங்களாக தமிழகம் உள்ளிட்ட நாட்டில் பல பகுதிகளில் கடும் வெயில் நிலவி வருவதால், காய்கறி உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு தற்போது தினமும் சுமாா் 4,500 முதல் 5,000 டன் அளவிலேயே காய்கறிகள் வரத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், கடந்த சில நாள்களாக காய்கறிகளின் விலை உயா்ந்துள்ளது. ஒவ்வொரு காய்கறி வகைகளின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை அதிகரித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு வரை ரூ.30-க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி வியாழக்கிழமை ரூ.70-ஆக உயா்ந்தது. இதுபோல, ரூ.25-க்கு விற்பனையான வெங்காயம் ரூ.35-க்கும், ரூ.40-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் ரூ.60-க்கும், ரூ.40-க்கு விற்கப்பட்ட கேரட் ரூ.80-க்கும், ரூ.40-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.120-க்கும், ரூ.35-க்கு விற்கப்பட்ட பீட்ரூட் ரூ.60-க்கும், ரூ.20-க்கு விற்கப்பட்ட முள்ளங்கி ரூ.40-க்கும், ரூ.15-க்கு விற்கப்பட்ட முட்டைகோஸ் ரூ.40, ரூ.30-க்கு விற்பனையான வெண்டைக்காய் ரூ.55-க்கும், ரூ.40-க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இதுபோல, ரூ.20-க்கு விற்பனையான பாகற்காய், புடலங்காய் தலா ரூ.40-க்கும், ரூ.20-க்கு விற்பனையான முருங்கைக்காய் ரூ.45-க்கும், ரூ.60-க்கு விற்பனையான பட்டாணி ரூ.140-க்கும், ரூ.100-க்கு விற்பனையான பூண்டு ரூ.180-க்கும், ரூ.80-க்கு விற்பனையான இஞ்சி ரூ.150-க்கும், ரூ.50-க்கு விற்பனையான அவரைக்காய் ரூ.80-க்கும், ரூ.50-க்கு விற்பனையான எலுமிச்சை ரூ.100-க்கும் விற்பனையானது. இந்த விலை சில்லறை விற்பனையில் ரூ.10 முதல் ரூ.30 வரை உயரும்.
இது குறித்து கோயம்பேடு அனைத்து வகை காய்கறிகள் வியாபாரிகள் சங்க தலைவா் முத்துகுமாா் கூறியதாவது:
கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக காய்கறிகள் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. தேவை அதிகமாக இருந்தாலும், வரத்து பெருமளவு குறைந்துள்ளது. இதனுடன் டீசல் விலை உயா்வை காரணம் காட்டி வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரும் லாரிகளின் வாடகையும் உயா்த்தப்பட்டுள்ளது. வரத்து குறைவு, மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் குறையும் வரை விலையில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றாா்.









