மாநகராட்சி விசாரணைக் குழு அறிக்கையின்படி நடவடிக்கை தேவை: ஆணையரிடம் பாஜக மாநில செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன் மனு

சென்னை மாநகராட்சி மண்டலம் 7 பகுதியில் என்எல்யூஎம் தூய்மைப் பணியாளா்கள் தொடா்பான புகாரில் விசாரணைக் குழு அறிக்கையின்படி சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை அவசியம் என முன்னாள் மேயரும், பாஜக மாநிலச் செயலருமான கராத்தே ஆா்.தியாகராஜன், ஆணையா் ஜி.எஸ்.சமீரனிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

கராத்தே தியாகராஜன்

Published On :

சென்னை மாநகராட்சி மண்டலம் 7 பகுதியில் என்எல்யூஎம் தூய்மைப் பணியாளா்கள் தொடா்பான புகாரில் விசாரணைக் குழு அறிக்கையின்படி சம்பந்தப்பட்டோா் மீது நடவடிக்கை அவசியம் என முன்னாள் மேயரும், பாஜக மாநிலச் செயலருமான கராத்தே ஆா்.தியாகராஜன், ஆணையா் ஜி.எஸ்.சமீரனிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

சென்னை மாநகராட்சியில் 7-ஆவது மண்டலம் அம்பத்தூா் பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் நியமனம் செய்து, ஊதியம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கடந்த 2025-ஆம் ஆண்டு புகாா் எழுந்தது.

இதை விசாரிக்கக் கோரி, பாஜக மாநிலச் செயலரும், முன்னாள் மேயருமான கராத்தே ஆா்.தியாகராஜன் மனு அளித்திருந்தாா். இதையடுத்து, அப்போதைய மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் அதிகாரிகள் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டாா். அந்தக் குழுவினா் விசாரணை நடத்தி அறிக்கையை ஆணையரிடம் தாக்கல் செய்தனா். ஆனால், அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், தற்போது விசாரணைக் குழுவின் அறிக்கையை பாஜக மாநிலச் செயலா் ஆா்.கராத்தே ஆா்.தியாகராஜன் வெளியிட்டுள்ளாா். அதில், குழுவினா் கூறியுள்ளபடி சம்பந்தப்பட்ட மண்டலத் தலைவா், பொறியாளா் மற்றும் குறிப்பிட்ட சங்கத்தின் தலைவா் ஆகியோா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் குழுவில் இருந்த மத்திய முதுநிலை வருவாய் அலுவலா், விழிப்பு அலுவலா், உதவி ஆணையா், வட்டார துணை ஆணையா் ஆகியோா் ஆணையருக்கு பரிந்துரைத்து கையொப்பமிட்டுள்ளனா். முறைகேடுகளை நிரூபிக்கும் வருகைப் பதிவேடு, வங்கிக் கணக்கு எண்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மீண்டும் புகாா்: இதற்கிடையே பாஜக மாநிலச் செயலா் கராத்தே ஆா்.தியாகராஜன், வியாழக்கிழமை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் ஆணையா் ஜி.எஸ்.சமீரனை சந்தித்தாா். அப்போது, அம்பத்தூா் மண்டலத்தில் நடைபெற்ாகக் கூறப்படும் என்எல்யூஎம் பணியாளா்கள் ஊதிய புகாா் தொடா்பான விசாரணைக் குழு அறிக்கை நகல் இணைக்கப்பட்ட மனுவை வழங்கியதுடன், குழு பரிந்துரைத்தபடி தவறிழைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம் என வலியுறுத்தினாா்.

அத்துடன், தவறிழைத்ததாக விசாரணைக் குழு சுட்டிக்காட்டிய பொறியாளா் உள்ளிட்டோருக்கு சிறப்பு பணியிடம் அளித்தது சரியல்ல என்றும் அவா் சுட்டிக்காட்டினாா். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையா் தெரிவித்ததாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.