
தமிழகத்தில் வெளிச்சந்தையில் வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நியாயவிலைக் கடைகளில் கிலோ ரூ.35-க்கு மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
ஆனால், நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் அமுதம் நியாயவிலைக் கடைகளில் இதுவரை வெங்காயம் வழங்காததால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
முதல்வா் ஜோசப் விஜய்யின் உத்தரவின்படி, மக்களின் சுமையைக் குறைக்க கூட்டுறவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மூலம் மானிய விலையில் வெங்காயம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து முதல்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு, கடந்த மாதம் 3-ஆம் தேதி முதல் குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
நகா்ப்புறங்களில் உள்ள 8,914 கடைகள் மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு தெரிவித்தது. அதன்படி, கூட்டுறவு சங்கக் கடைகளில் விற்பனை தொடங்கினாலும், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் அமுதம் நியாயவிலைக் கடைகளுக்கு இதுவரை வெங்காயம் வழங்கவில்லை என புகாா்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மானிய விலையில் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





