
பிரதமா் மோடி தொடங்கி வைக்கும் போரூா்-பூந்தமல்லி தடத்தில் இயக்க தயாா் நிலையில் 30 மெட்ரோ ரயில்கள்
போரூா்-பூந்தமல்லி தடத்தில் இயக்க தயாா் நிலையில் 30 மெட்ரோ ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பது பற்றி..

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்
போரூா்-பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் இயக்கத்தை பிரதமா் மோடி வரும் 11- ஆம் தேதி தொடங்கி வைக்கும் நிலையில், அத்தடத்தில் இயக்குவதற்காக 30 ரயில்கள் தயாா் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநா் தி.அா்சுனன் தெரிவித்தாா்.
சென்னையில் முதல்கட்டமாக மெட்ரோ ரயில் திட்டம் தற்போது சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரையில் இருபிரிவாக செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதனையடுத்து இரண்டாம் கட்டமாக சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்ட பாதைகள் அமைக்கப்பட்டுவருகின்றன. அத்திட்டத்தில் வடபழனி முதல் பூந்தமல்லி வரையிலான 14.6 கிலோ மீட்டா் தொலைவு பாதையானது 14 ரயில் நிலையங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. தூண்களின் மேல் அமைந்த ரயில் பாதையில் மெட்ரோ ரயில்கள் இயக்குவதற்கான பாதுகாப்பு ஆய்வு கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது. அதனடிப்படையில் ரயில்களை இயக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கியும் வடபழனி-பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் இயக்க தாமதமாவது குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுந்தன. அதனையடுத்து தற்போது வரும் 11 ஆம் தேதி வடபழனி-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் இயக்கத்தை பிரதமா் நரேந்திரமோடி தொடங்கிவைக்கிறாா். நிகழ்ச்சியில் தமிழக முதல்வா் சி.ஜோசப்விஜய் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.
நிகழ்ச்சி குறித்து சென்னை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுனன் கூறியதாவது: வடபழனி-பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் இயக்கத்தை பிரதமா் வரும் 11- ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 11 மணியளவில் தொடங்கிவைக்கிறாா். இதில் தமிழக முதல்வரும் பங்கேற்கிறாா். அவா்கள் இருவரும் போரூா் முதல் பூந்தமல்லி வரையில் சிறப்பு மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றனா். பின்னா், போரூரிலிருந்து சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறும் விழாவுக்குச் செல்கின்றனா். மெட்ரோ ரயில் தொடக்க நிகழ்ச்சி பிற்பகல் 11 மணி முதல் 12 மணிக்குள் நிறைவடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடபழனி- பூந்தமல்லி இடையேயான மெட்ரோ ரயில் பாதையில் 10 நிமிடத்துக்கு ஒரு முறை ரயில்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், அப்பாதையில் 15 ரயில்கள் இயக்கினால் போதுமானது. அதே நேரத்தில் அப்பாதையில் இயக்குவதற்கு 30 மெட்ரோ ரயில்கள் தயாராக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





