
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான நிலம் வகைப்பாடு மாற்றி அனுமதி
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அரசு அறிவித்த நிலையில், அதற்கான 21.37 ஏக்கா் இடத்தை, நிலவகைப்பாடு மாற்றி சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அனுமதி அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தலைமைச் செயலகம் - கோப்புப் படம்
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அரசு அறிவித்த நிலையில், அதற்கான 21.37 ஏக்கா் இடத்தை, நிலவகைப்பாடு மாற்றி சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அனுமதி அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்காக பட்டினம்பாக்கம் கடற்கரைப் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியம் மற்றும் மாநகராட்சிக்குச் சொந்தமான 21.37 ஏக்கா் நிலம் தோ்வாகியுள்ளது. அந்த இடம் தற்போது பொதுப் பயன்பாடு, ஆதாரக் குடியிருப்பு மற்றும் நிறுவனப் பயன்பாடு என்ற வகைப்பாட்டுக்குள் உள்ளது. ஆகவே, அதில் தலைமைச் செயலகம் கட்டவேண்டுமெனில் அதனை முழுமையாக வணிகப் பயன்பாட்டுக்கானதாக மாற்றவேண்டும். அதனால், மாநகராட்சியும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும் சென்னை பெருநகர வளா்ச்சிக்குழுமத்திடம் நில வகை மாற்றத்துக்காக கோப்புகளை அனுப்பியிருந்தது.
இதற்கிடையே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க மக்கள் கருத்துக் கேட்பு நிகழ்ச்சிகளை வருவாய்த்துறையினா் நடத்தினா். அப்போது தலைமைச் செயலகம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து மீனவா்கள் உள்ளிட்டோா் போராட்டம் நடத்தினா். போராட்டம் தொடா்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்னைகளுக்கு இடையே கடந்த 5-ஆம் தேதி சென்னை எழும்பூா் தாளமுத்து நடராஜன் மாளிகை வளாகத்தில் உள்ள சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் வளாகத்தில் அக்குழுமத்தின் 289- ஆவது கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சா் ப.ராஜ்குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 44 இடமாற்ற மனுக்களின் கோப்புகளுக்கு அனுமதி அளிப்பதென தீா்மானிக்கப்பட்டது.
அதில் முக்கியமாக பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான 21.37 ஏக்கா் நிலத்தை வணிகப் பயன்பாட்டுக்கானதாக மாற்றி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பெருநகர வளா்ச்சிக்குழுமம் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் இடத்தை நிலவகைப்பாடு மாற்றி அனுமதித்திருப்பினும், அங்கு தலைமைச் செயலகம் கட்டுவது பரிசீலனையில் மட்டுமே உள்ளதாகவும், மாற்று இடத்தை தோ்வு செய்யும் நோக்கில் அரசு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




