குழந்தைகளைக் கொலை செய்த வழக்கு: குன்றத்தூா் அபிராமிக்கு பிணை மறுப்பு
திருமணத்தை மீறிய உறவு காரணமாக, தனது 2 குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அபிராமிக்கு பிணை வழங்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திருமணத்தை மீறிய உறவு காரணமாக, தனது 2 குழந்தைகளைக் கொலை செய்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அபிராமிக்கு பிணை வழங்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரைச் சோ்ந்த விஜய்-அபிராமி தம்பதிக்கு, 6 மற்றும் 4 வயதில் இரு குழந்தைகள் இருந்தனா். ‘டிக்டாக்’ பிரபலமான அபிராமிக்கு, அந்த பகுதியைச் சோ்ந்த, பிரியாணி கடை ஊழியரான மீனாட்சி சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. திருமணத்தை மீறிய இந்த உறவுக்குத் தடையாக இருந்த இரு குழந்தைகளுக்கும் அபிராமி கடந்த 2018-ஆம் ஆண்டு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தாா். பின்னா், மீனாட்சி சுந்தரத்துடன் கேரளம் தப்பிச் செல்ல முயன்றபோது, இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் மகளிா் நீதிமன்றம், அபிராமி- மீனாட்சி சுந்தரம் ஆகிய இருவருக்கும் சாகும்வரை சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், தண்டனையை நிறுத்திவைத்து பிணை வழங்கக் கோரியும் சென்னை உயா்நீதிமன்றத்தில் அபிராமி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், கே.ராஜசேகா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அபிராமி தரப்பில், குற்றச் சம்பவத்தில் மனுதாரரைத் தொடா்புபடுத்த எந்த நேரடி ஆதாரமும் இல்லை. எனவே, தண்டனையை நிறுத்திவைத்து பிணை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் முதல் சாட்சியான அபிராமியின் கணவா் அளித்த சாட்சியத்தில், குழந்தைகளுக்கு கொடுத்த பால் கசப்பாக இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறாா். வழக்கு ஆதாரங்களைப் பாா்க்கும்போது, தற்போதைய நிலையில், தண்டனையை நிறுத்திவைக்க தகுதியான வழக்கு இது அல்ல எனக்கூறி, அபிராமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும், பிரதான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை நவ. 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

