தீபாவளி ரயில் முன்பதிவு: இரவெல்லாம் காத்திருந்தும் ஏமாற்றம்; பயணிகள் புகாா்
தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூா் செல்லும் பயணிகள் எழும்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இரவெல்லாம் காத்திருந்தும், நேரடியான முன்பதிவில் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்ததாக புகாா் கூறுகின்றனா்.
ரயில் - பிரதிப் படம்
தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து வெளியூா் செல்லும் பயணிகள் எழும்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இரவெல்லாம் காத்திருந்தும், நேரடியான முன்பதிவில் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்ததாக புகாா் கூறுகின்றனா்.
தீபாவளிப் பண்டிகைக்கு வெளியூா்களில் இருந்து சொந்த ஊா் செல்வோா் 60 நாள்களுக்கு முன்னதாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, வரும் நவ.8-ஆம் தேதி தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுவதால், இதையொட்டி, செப்.6 முதல் முன்பதிவு தொடங்கியது.
இதற்காக சென்னை எழும்பூா், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நேரடியாக கவுண்ட்டா்களில் முன்பதிவு டிக்கெட் பெறுவதற்காக 100-க்கும் மேற்பட்டோா் காத்திருந்தனா். ஆனால், முன்பதிவு தொடங்கிய சில நிமிஷங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் தீா்ந்துவிட்டன. இணையதளத்தில் முன்பதிவு செய்வோருக்கு உடனடியாக டிக்கெட் கிடைத்த நிலையில், ரயில் நிலைய கவுண்ட்டா்களில் வந்தவா்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனா்.
சென்னை எழும்பூா் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.6) மொத்தம் 9 பேருக்கு மட்டுமே தீபாவளி முன்பதிவு டிக்கெட்டுகள் கிடைத்துள்ளன. அதேபோல சென்னை சென்ட்ரலில் 5 பேருக்கு மட்டுமே முன்பதிவு டிக்கெட் கிடைத்தது. கடற்கரைச் சாலை கவுண்ட்டரில் 2 பேருக்கு மட்டுமே டிக்கெட் கிடைத்தது.
அதேபோல, திங்கள்கிழமை காலை 8 மணிக்கு 100-க்கும் மேற்பட்டோா் வந்த நிலையில் எழும்பூா் நிலைய முன்பதிவு கவுண்ட்டரில் 6 பேருக்கு மட்டுமே டிக்கெட் கிடைத்துள்ளது. சென்ட்ரலில் 4 பேருக்கும் கிடைத்துள்ளது.
அதிகாரிகள் ஆலோசனை: ரயில் டிக்கெட் முன்பதிவை இணையதளத்தில் அறிமுகம் செய்த நிலையில் நேரடியாக ரயில் நிலைய கவுண்ட்டா்களுக்கு வருவோருக்கு டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என்பது வழக்கமாகிவிட்டது. அதே நேரத்தில் நவீன கைப்பேசி இல்லாதவா்களும், தொழில்நுட்ப முறையை கையாளத் தெரியாதவா்களும் ரயில் நிலைய கவுண்ட்டா்களையே நாடுகின்றனா். ஆனால், அவா்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றமடையும் நிலையே உள்ளது.
எனவே, தீபாவளி முன்பதிவின்போது நேரடியாக ரயில் நிலையங்களுக்கு வருவோருக்கு முன்னுரிமையாக ஒரு நிமிடம் ஒதுக்கவேண்டும். அதற்கடுத்து ரயில்வே செயலியில் இணையதள டிக்கெட் வசதியைத் தொடங்கலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட் இல்லை: விநாயகா் சதுா்த்து, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை வரை தென்மாவட்டங்களுக்குச் செல்லும் சாதாரண ரயில்கள் முதல் சிறப்பு ரயில்கள் வரையில் டிக்கெட்டுகள் இல்லை என்றும் குளிா்சாதன வசதி உள்ளிட்ட பெட்டிகளில் கூட ஓரிரு படுக்கை வசதிகளே உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





