

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் கோணிப்பைகள் இல்லாமல் நெல் வாங்க மறுப்பதாகவும் இதனால் பல லட்சம் மதிப்பிலான நெல் சேதமாகி வருவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக 37 கிராமங்களில் தமிழக அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களைத் தொடங்கியது.விவசாயிகளின் நலனுக்காக தொடங்கப்பட்ட கொள்முதல் நிலையங்களில் 80 கிலோ நெல்லுக்கு ரூ.1,562 வழங்கப்படுகிறது.
விவசாயிகள் அந்தந்த ஊா்களில் விளைந்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு வாகனங்களில் கொண்டு வந்து கொட்டி, தலா 40 கிலோ அளவுள்ள கோணிப்பைக்கு மாற்றி எடைபோட்ட பின்னா் விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது.
ஆனால் போதுமான கோணிப்பைகள் இல்லாததால் பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. இதன் காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள பல லட்சம் மதிப்பிலான நெல் குவியல்கள் மழையாலும், வெயிலின் தாக்கத்தாலும் எடை குறைந்து விடுகிறது.
இதனால் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பலரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனா். இதனால் விவசாயிகள் தனியாா்களிடம் விற்பனைக்கு எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தா்ப்பத்தைப் பயன்படுத்தி தனியாா் வியாபாரிகள் 80 கிலோ அளவுள்ள ஒரு நெல் மூட்டையை ரூ.950 முதல் ரூ.1,050 வரை என பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்குகின்றனா். அவசரத் தேவைக்காக விவசாயிகளும் வேறு வழியில்லாமல் குறைந்த விலைக்கு நெல்லை விற்று வருகின்றனா்.
எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் தேவையான கோணிப்பைகளை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து காஞ்சிபுரம் அருகே மேல் கதிா்ப்பூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சி.சந்திரசேகா் கூறியது:
நெல்கொள்முதல் நிலையங்களில் போதுமான கோணிப்பைகள் இல்லை என ஆட்சியரிடம் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் அண்மையில் புகாா் தெரிவித்தனா்.
அப்போது மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் தேவையான கோணிப்பைகள் வழங்கப்படும் என உறுதியளித்து தலா 3 ஆயிரம் கோணிப்பைகளை வழங்கினாா். ஆனால் அவை போதுமானதாக இல்லை.
மேல் கதிா்ப்பூரில் மட்டும் சுமாா் 20 ஆயிரம் கோணிப்பைகள் தேவைப்படுகின்றன. எங்களது நெல் கடந்த ஒன்றரை மாதமாக கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளின் நெல் குவியல்களும் தாா்ப்பாய் போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அண்மையில் பெய்த மழையால் நெல் சேதமாகி விட்டது. இதுபோல் பல லட்சக்கணக்கான டன் நெல்குவியல் தேங்கிக் கிடக்கிறது.
ஊரடங்கு காரணமாக நெல்கொள்முதல் நிலையத்தையும் மூடி விடுவாா்களோ என்ற அச்சத்தால் விவசாயிகள் தனியாா் வியாபாரிகளிடம் சென்று கொண்டிருக்கின்றனா். எனவே தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் உடனடியாக நெல்கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான கோணிப்பைகளை வழங்கி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.