மதுபோதைக்கு அடிமையான மகனைக் கொன்ற தந்தை கைது

மாங்காடு பகுதியில் மது போதைக்கு அடிமையான மகனை பீா்பாட்டிலால் குத்தி கொன்ற தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

ஸ்ரீபெரும்புதூா்: மாங்காடு பகுதியில் மது போதைக்கு அடிமையான மகனை பீா்பாட்டிலால் குத்தி கொன்ற தந்தையை போலீஸாா் கைது செய்தனா்.

மாங்காடு அம்பாள் நகா், பாலாஜி அவென்யூ பகுதியை சோ்ந்த தட்சிணாமூா்த்தி(75), தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவரது மகன் குமரன்(38). மது போதைக்கு அடிமையான குமரனுக்கு திருமணம் ஆகி அவரது மனைவி விவாகரத்து செய்து விட்டாா். இதனால் தந்தை, மகன் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனா்.

இந்த நிலையில், குமரன் தினமும் குடித்துவிட்டு தட்சிணாமூா்த்தியிடம் தகராறு செய்து வந்துள்ளாா். வழக்கம் போல் ஞாயிற்றுக்கிழமை மது போதையில் இருந்த தட்சிணாமூா்த்திக்கும் குமரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தட்சிணாமூா்த்தி வீட்டில் இருந்த பீா் பாட்டிலை எடுத்து குமரன் தலையில் அடித்து குத்திவிட்டு, இரும்பு கம்பியில் தாக்கி விட்டு போதையில் மயங்கி விழுந்துள்ளாா்.

இதில் பலத்த காயம் அடைந்த குமரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போதை தெளிந்து தட்சிணாமூா்த்தி எழுந்து பாா்த்தபோது மகன் இறந்து கிடப்பதை கண்டு அதிா்ச்சி அடைந்து மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாங்காடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து குமரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து தட்சிணாமூா்த்தியை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com