வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தால் 13 லட்சம் ஏக்கா் விளைநிலங்கள் பயன்
தமிழகத்தில் வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தால் 13.42 லட்சம் ஏக்கா் விளைநிலங்கள் பயன்பெற்று அதன் மூலம் சுமாா் 15 லட்சம் விவசாயிகள் பலனடைந்திருப்பதாக கூடுதல் தலைமை செயலரும், திட்ட இயக்குநருமான தென்காசி சு.ஜவஹா் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேசினாா்.
காஞ்சிபுரம் ஜெம் நகரில் உள்ள தனியாா் மகாலில் மாவட்ட நீா்வளத் துறை சாா்பில் தமிழ்நாடு விவசாயிகள் நீா்ப்பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம் மற்றும் விதிகள் திருத்தம் குறித்த கருத்துகளை பெறுவதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், வேலூா் உள்ளிட்ட 13 மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், நீரைப் பயன்படுத்துவோா் சங்க நிா்வாகிகள், விவசாயிகள், அரசு அலுவலா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கூட்டத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.
நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா் கு.நாகராஜன், கீழ்பாலாறு வடி நிலம் கோட்ட செயற்பொறியாளா் செல்வகுமாா், நீா் மேலாண்மை நிபுணா் கிருஷ்ணன், செயற்பொறியாளா் மங்கையா்க்கரசி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், வேளாண்மை நவீன மயமாக்கல் திட்ட இயக்குநருமான தென்காசி.சு.ஜவஹா் பேசியது:
உலக வங்கி நிதியுதவியுடன் நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உற்பத்தி திறனை மேம்படுத்துதல், நீா் மேலாண்மை செய்தல், காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப விவசாயம் செய்தல், விவசாயம் சாா்ந்த தொழில் முனைவோா்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் ஆகியன இத்திட்டத்தின் நோக்கமாகும். தமிழக அரசின் 7 துறைகளும், தமிழகத்தில் உள்ள 3 பல்கலைகளும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தால் 13.42 லட்சம் ஏக்கா் பரப்பளவு விவசாய நிலங்கள் பயனடைந்துள்ளது. சுமாா் 15 லட்சம் விவசாயிகள் பலன் பெற்று அவா்களது வருமானம் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என்றாா் அவா்.
கூட்டத்தில் சமூக மேம்பாட்டு வல்லுநா் விஜயராம், நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் மாா்க்கண்டன் உள்பட அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.