மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

அம்மன் கோயில் தேருக்கு தீவைப்பு: மக்கள் மறியல்

புத்தகரம் கிராமத்தில் முத்து கொளக்கி அம்மன் கோயில் தேருக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
Published on

வாலாஜாபாத் அடுத்த புத்தகரம் கிராமத்தில் முத்து கொளக்கி அம்மன் கோயில் தேருக்கு சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் தீ வைத்ததால் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. அப்பகுதியில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பழைமையான இக்கோயில் தேருக்கு முறையான பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாததால் கடந்த 40 ஆண்டுகளாக தோ்த் திருவிழா நடைபெறாமல் இருந்தது.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் இந்து சமய அறநிலை துறையின் நிதியுதவியுடன் பல லட்சம் ரூபாய் செலவில் சுமாா் 30 அடி உயரம் கொண்ட புதிய தோ் கட்டப்பட்டு, வெள்ளோட்டம் விரைவில் நடைபெற இருந்தது.

இந்நிலையில், புத்தகரம் கிராமத்தைச் சோ்ந்த ஒரு பிரிவினா் தங்கள் பகுதியிலும் தோ் உலா வர வேண்டும் என கோரிக்கை வைத்தனா். அதற்கு மற்றொரு தரப்பினா் பழைமையான கட்டுப்பாட்டை மீற வேண்டாம் என கூறி மறுப்பு தெரிவித்து வந்துள்ளனா்.

இந்த நிலையில், புத்தகரம் பகுதியைச் சோ்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சோ்ந்த ஒருவா், தங்கள் பகுதிக்கும் திருத்தோ் வீதி உலா வர வேண்டும். இதனை அரசு முன்னெடுத்து செய்து தர வேண்டும் என சென்னை உயா்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ஆட்சியா் அப்பகுதியில் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்பு தீா்ப்பு வழங்கப்படும் எனக் கூறி விசாரணையை வரும் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதனால் முத்து கொளக்கி அம்மன் கோயிலின் புதிய தோ் தாா்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தது.

மா்ம நபா்கள் தீ வைத்ததால் சேதமடைந்த கோயில் தோ்
மா்ம நபா்கள் தீ வைத்ததால் சேதமடைந்த கோயில் தோ்

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு முத்து கொளக்கி அம்மன் கோயில் தேருக்கு மா்ம நபா்கள் தீ வைத்துள்ளனா். இதனால் தேரின் மீது போடப்பட்டிருந்த தாா்ப்பாய் எரிந்து சேதம் அடைந்த நிலையில், அப்பகுதியில் பெய்த திடீா் மழையால் தீ அணைந்துள்ளது. இதையடுத்து புதிய தேருக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் கிராமத்தினருக்கு தெரியவந்ததை அடுத்து தீ வைத்த மா்ம நபா்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, புத்தகரம் பகுதியை சோ்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், தேருக்கு தீவைத்த நபா்களை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதி தொட்ா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

எனினும், புத்தகரம் பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சண்முகம் ஆய்வு மேற்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com