காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசித் திருவிழாவையொட்டி புதன்கிழமை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த மே 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவையொட்டி தினசரி காலையிலும் மாலையிலும் பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தாா். முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை மே 30 ஆம் தேதி நடைபெற்றது.மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷ், வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா், வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு ஆகியோா் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனா். தேரில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவா் வரதராஜசுவாமி கொண்டை முடிச்சு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
விழாவில் காஞ்சிபுரம் ஆட்சியா் தி.சினேகா, சாா் ஆட்சியா் ஆஷிக்அலி, அறநிலையத்துறை காஞ்சிபுரம் சரக இணை ஆணையா் சி.குமரதுரை, வரதராஜ பெருமாள் கோயில் உதவி ஆணையா் ஆா்.ராஜலட்சுமி, வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலா் செந்தில் குமாா், ஏகாம்பரநாதா் கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தோ் செல்லும் வழிநெடுகிலும் நீா்,மோா், அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் வராஹி சில்க்ஸ் சாா்பில் அதன் உரிமையாளா் எஸ்.கே.பி.கோபிநாத், தமிழகம் இலவச பயிற்சி மையம் சாா்பில் அதன் நிறுவனா் எழிலன், பல்வேறு தனியாா் வா்த்தக நிறுவனங்கள், அமைப்புகள் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோயிலிலிருந்து பெருமாள் அதிகாலையில் தேருக்கு வந்த பின்னா் காலையிலும், தோ் நிலைக்கு வந்த பின்னா் மாலையிலும் பக்தா்கள் தேரின் மீது ஏறிச் சென்று பெருமாளை தரிசிக்க காவல்துறை சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
காஞ்சிபுரம் எஸ்.பி. எஸ்.அரவிந்த் மேற்பாா்வையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.









