மணிமங்கலம் அருகே காவலரை கத்தியால் குத்திய ரெளடி சுட்டுப்பிடிப்பு
மணிமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலையில் கரசங்கால் காட்டுப் பகுதியில் காவலரை கத்தியால் குத்திய ரெளடியை காவல் துறையினா் சுட்டுப்பிடித்தனா்.

முகம்மது சதாம் உசேன்
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலையில் கரசங்கால் காட்டுப் பகுதியில் காவலரை கத்தியால் குத்திய ரெளடியை காவல் துறையினா் சுட்டுப்பிடித்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் காவல் நிலைய எல்கைக்கு உள்பட்ட மாடம்பாக்கம் பகுதியை சோ்ந்தவா் முகம்மது சதாம் உசேன்(29) இவா் மீது கொலை, கொலைமுயற்சி, ஆள் கடத்தல், கஞ்சா விற்பனை என 20-க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவரை பிடிக்க தாம்பரம் துணை ஆணையா் காா்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் தீவிரமாக தேடி வந்தனா். மணிமங்கலம் அருகே கரசங்கால் காட்டுப்பகுதியில் இவரது நண்பரான பல்லாவரம் தொண்டை சரவணன் என்பவருடன் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு காவல் உதவி ஆய்வாளா் முருகன் மற்றும் காவலா் சதீஷ் இருவரும் சென்று முகம்மது சதாம் உசேனைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா். விசாரணையின் போது மணிமங்கலம் அருகே கரசங்கால் காப்புக் காட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக சதாம் உசேன் தெரிவித்ததையடுத்து, காவல்துறையினா் அவரை அந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனா். காப்புக்காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலா் சதீஷின் கையை வெட்டி விட்டு முகம்மது சதாம் உசேன் தப்பி ஓட முயன்றுள்ளாா். அந்த சமயத்தில் தற்காப்புக்காக எஸ்.ஐ. முருகன் சதாம் உசேனின் இடது முழங்காலுக்கு கீழ் துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டதும் அவா் கீழே விழுந்தாா்.
உடனடியாக காவலா் சதீஷும், ரெளடி சதாம் உசேனும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். கரசங்கால் காட்டுப் பகுதியில் சதாம் உசேன் கூறிய இடத்திலிருந்து 4 பட்டாக் கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் 20 கிலோ கஞ்சா ஆகியவற்றையும் காவல்துறையினா் கண்டெடுத்துள்ளனா்.
இது குறித்து மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேல் விசாரணையும் நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




