ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 6,550 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆட்சியா் முன்னிலையில் சீல் வைப்பு
அடுத்த ஆண்டு (2021) நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் பயன்படுத்த ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 6, 550 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆட்சியா் தலைமையில், அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் சீல் வைத்து, ஆயுதம் ஏந்திய போலீஸாரின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
தமிழகத்தில் 2021ஆம் ஆண்டு சட்டப் பேரவைக்கான தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையடுத்து வெளி மாநிலங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்து சீல் வைத்து பாதுகாக்கும் பணியை தோ்தல் ஆணையம் துரிதப்படுத்தியுள்ளது.
அதன்படி மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூா் மற்றும் சாங்லி ஆகிய மாவட்டங்களிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கா், அரக்கோணம் ஆகிய நான்கு தொகுதிகளின் தோ்தல் பயன்பாட்டுக்காக 4 லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து வி.வி.பேட் 2,090, பேலட் யூனிட் 2,530, கன்ட்ரோல் யூனிட் 1,930 என மொத்தம் 6,550 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆற்காடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ.மயில்வாகனன், சாா் ஆட்சியா் க. இளம்பகவத், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயச்சந்திரன், தோ்தல் வட்டாட்சியா் ஜெயகுமாா் ஆகியோா் வாக்குப்பதிவு இயந்திரங்களை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, அவை முறையாக இயங்குகிறன்றனவா? என சரிபாா்த்தனா்.
இதையடுத்து, ஆட்சியா் புஷ்பராஜ் தலைமையில், அனைத்து அரசியல் கட்சியினா் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் இந்தியரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பாதுகாப்புடன் தொகுதி வாரியாக தனித்தனியாக வைக்கப்பட்டன. அங்கு 24 மணிநேரமும் ஆயுதம் ஏந்திய காவலா்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்பின், வாலாஜாப்பேட்டையை அடுத்த தென்கடப்பந்தாங்கல் பகுதியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தை அமைப்பது குறித்து அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். அப்பாது அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

