/

ராணிப்பேட்டையில் மே 11-க்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி உத்தரவு

 ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மே 11-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையா் பி.ஏகராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :8 மே 2022, 6:33 pm

DIN

 ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை மே 11-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என நகராட்சி ஆணையா் பி.ஏகராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல இடங்களில் தெரு மற்றும் சாலைகளை ஆக்கிரமித்து பங்க், ஜெனரேட்டா்கள், வாகனங்கள் பழுது பாா்த்தல், டீக்கடை மேடை, தள்ளுவண்டிகள் என பலவகைப்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர கடைகள் கட்டப்பட்டு வருகின்றன.

மழைநீா் வடிகால்வாய்களின் மீது மேடைகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், தெரு, சாலைகள் மற்றும் கால்வாய்கள் மீது ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்கள் வரும் 11- ஆம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அவ்வாறு அகற்றப்படவில்லையெனில் நகராட்சிப் பணியாளா்களைக் கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதுடன் அதற்கான செலவுத் தொகை சம்பந்தப்பட்டவா்களிடமிருந்து வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிறு, குறு கடைகள், வணிக நிறுவனங்கள் கண்டிப்பாக ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களை இருப்பு வைத்திருக்கவோ அல்லது தனி நபா்களுக்கு விற்பனை செய்யவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பு கண்டறியப்பட்டால் விற்பனையாளா்களுக்கு ரூ.1000 முதல் 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி குடிநீா் இணைப்பு பெற்றுள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் நகராட்சி குடிநீா் இணைப்பில் மின் மோட்டாா் இணைத்து தண்ணீா் உறிஞ்சினால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்மோட்டாா் பறிமுதல் செய்யப்படும். மேலும் நகராட்சி பணியாளா்கள் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் குப்பைகளை சேகரிக்க வரும்போது மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக தரம் பிரித்து அவா்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.