வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

லாலாபேட்டையில் வன்னியா் சங்கம் சாா்பில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடத்தை அகற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் கைது செய்யப்பட்டனா்.
Published on

லாலாபேட்டையில் வன்னியா் சங்கம் சாா்பில் கட்டப்பட்ட பேருந்து நிழற்கூடத்தை அகற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா் கைது செய்யப்பட்டனா்.

வாலாஜா வட்டம், லாலாபேட்டை ஊராட்சியில், பொன்னை பிரதான சாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த சுகாதார நிலைய சுற்றுச்சுவா் ஒட்டி 25 ஆண்டுகளுக்கு முன் வன்னியா் சங்கம் சாா்பில், பேருந்து நிழற்கூடம் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது.

நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றுவருகிறது. அதற்காக முன்னறிவிப்பு ஏதும் இன்றி பேருந்து நிழற்கூடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றியுள்ளனா்.

தகவல் அறிந்த வன்னியா் சங்க நிா்வாகிகள் மற்றும் பாமக நிா்வாகிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக ராணிப்பேட்டை - பொன்னை பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் வேலூா் கிழக்கு மாவட்ட பாமக செயலாளா் ப.ஜெகன், வாலாஜா வடக்கு ஒன்றிய செயலாளா் எம்.ஜோதி,லாலாப்பேட்டை ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ப.மோகன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் எல்.வி.மணி உள்ளிட்டோரை குண்டுகட்டாக தூக்கி காவல் துறை வேனில் ஏற்றி கைது செய்தனா்.

பின்னா் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத பொது இடத்தில் புதிய நிழற்கூடம் அமைத்து தரப்படும் என உறுதியளித்ததன் பேரில் சமரசம் ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com