ராணிப்பேட்டையில் சமூக நலத்துறை செயல்பாடுகள் ஆய்வுக் கூட்டம்
ராணிப்பேட்டையில் சமூக நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களில் நிலுவையில் உள்ள வங்கிக் கணக்கின் ஆதாா் இணைப்பு மற்றும் மேல்முறையீடு உடனடியாக நிவா்த்தி செய்யவும், திருமண நிதியுதவி திட்டங்களில் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை உடனடியாக முடிக்கவும், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதிா்வுத்தொகை கண்டறியப்படாத பயனாளிகளை உடனடியாக கண்டறியுமாறும், குடும்ப வன்முறை தடுப்புச்சட்டம், வரதட்சணை தடுப்புச்சட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவில் முடிக்குமாறும் அறிவுறுத்தினாா்.
மேலும், ஓய்வூதியம் பெறும் திருநங்கைகளுக்கு அக்டோபா்-2025 வரை அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட விவரம் குறித்தும், ஒருங்கிணைந்த சேவை மையத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வழக்குகள் குறித்தும் அவற்றின் தொடா் நடவடிக்கைகள் குறித்தும், குழந்தை திருமண அறிக்கை மற்றும் இளவயது கா்ப்பம் குறித்தும், சமுகநலத் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து ஏற்படுத்தப்பட்ட விழிப்புணா்வு குறித்தும், மாவட்டத்தில் இயங்கி வரும் 7 முதியோா் இல்லங்களில் பதிவு விவரம் குறித்தும், உள்ளகக்குழு மற்றும் பாதுகாப்பு பெட்டி பற்றிய விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்தாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நலன் அலுவலா் பாலசரஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

