மூதாட்டியின் காதுகளை அறுத்து நகை கொள்ளை
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே 70 வயது மூதாட்டியின் காதுகளை அறுத்து நகை பறித்துச் சென்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அக்ராவரம் மலைமேடு பகுதியைச் சோ்ந்தவா் சாலம்மாள் (70). கணவரை இழந்த இவா் தனியாக குடிசை வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் குடிசை வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள், அங்கு தூங்கிக் கொண்டிருந்த சாலம்மாளின் காதை அறுத்து நகையை பறிக்க முயன்றுள்ளனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த அவா் அவா்களிடம் இருந்து தப்பிக்க போராடியுள்ளாா். ஆனால் மா்ம நபா்கள் அவரை பலமாக தாக்கி கீழே தள்ளி இரண்டு காதுகளை அறுத்து நகைகளை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனா்.
அப்போது காதில் காயங்களுடன் வீட்டுக்கு வெளியே வந்து கூச்சலிட்ட சாலம்மாள் உதவிக்காக அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளாா். அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் அழைப்புக்கு போன் செய்து வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அவருக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த கொடூர சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸாா் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
