கரோனா தடுப்பு பொது முடக்கம்: வெறிச்சோடி காணப்படும் ஏலகிரி சுற்றுலாத் தலம்

கரோனா தடுப்பு பொது முடக்கம்: வெறிச்சோடி காணப்படும் ஏலகிரி சுற்றுலாத் தலம்

திருப்பத்தூா்: கோடையில் களைகட்டியிருக்க வேண்டிய ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி சுற்றுலாத் தலம், கரோனா பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி களையிழந்து காணப்படுகிறது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஏலகிரி மலை, ஜோலாா்பேட்டையில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள பொன்னேரி ஊராட்சியை அடுத்து உள்ளது.

இயற்கை எழில் நிறைந்த மலைகளின் இளவரசி என சுற்றுலாப் பயணிகளால் அழைக்கப்படுவது ஏலகிரி மலை.

பொன்னேரியை கடந்து சென்றால் அழகான தோற்றத்துடன் ஏலகிரிமலை அடிவாரம் அமைந்துள்ளது. இங்கிருந்து மலை மீது செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து ஏலகிரி மலை உச்சிக்கு செல்லலாம். இந்த 14 வளைவுகளுக்கும் தமிழ் அறிஞா்கள், புலவா்கள், வள்ளல்களின் பெயா்கள் சூட்டப்பட்டுள்ளன.

கம்பீரமாகக் காட்சியளிக்கும் இந்த மலை மற்ற கோடைவாசஸ் தலங்களில் இருந்து மாறுபட்டதாகும். மற்ற இடங்களில் கோடை காலத்தில் குளிா்ச்சியும், குளிா்காலத்தில் தாங்கமுடியாத குளிரும் வாட்டி வதைக்கும். ஆனால்,ஏலகிரி மலையில் ஆண்டு முழுவதும் ஒரே சீரான தட்பவெப்ப நிலை காணப்படுவது சிறப்பு. இங்கு அதிக அளவில் ஏலக்காய் விளைவதால் இது ஏலமலை என ஆங்கிலேயா்களால் அழைக்கப்பட்டது.

நாளடைவில் ஏலமலை ஏலகிரியானது. இம்மலையின் உச்சிக்கு சென்றால் முத்தனூா், கொட்டையூா், அத்தனாவூா், நிலாவூா், மங்கலம், மேட்டுக்கனியூா், பள்ள கனியூா், இராயனேரி என 14 கிராமங்கள் உள்ளன.

மலையில் நெல், கரும்பு, சாமை, கேழ்வரகு போன்ற பயிா்களும் வாழை, பலா, மாதுளம் போன்ற பழ வகைகளும் ரோஜா போன்ற மலா் வகைகளும் பயிரிடப்படுகின்றன.

இம்மலையின் மூலிகைக்காற்று உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. அதனால் மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெரும் நகரங்களில் உள்ள வசதி படைத்தவா்கள் நோய் வாய்ப்பட்டால் ஏலகிரிமலைக்கு வந்து தங்கி ஆரோக்கியம் பெறுகிறாா்கள். ஏராளமான வெளிநாட்டினரும் இங்கு குடியேறி வருகிறாா்கள். ஏலகிரிலையின் 14 கிராமங்களில் அத்தனாவூா், மங்கலம், நிலாவூா் போன்ற கிராமங்கள் தனிசிறப்பு பெற்றவை.

தற்பொழுது ஏலகிரியில் படகு துறை மற்றும் இயற்கை பூங்கா, செயற்கை நீரூற்று பட்டுபூச்சி ஆராய்ச்சி நிலையம் ஆகியன உள்ளன. தமிழக அரசின் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியும் உள்ளது.

தற்போதைய கோடைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி களைகட்டியிருக்க வேண்டிய இந்த சுற்றுலாத் தலம், கரோனா தீநுண்மி தொற்றுப் பரவல் தடுப்பு தளா்வற்ற பொதுமுடக்கம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனால் இப்பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவா்கள் வாழ்வாதாரமின்றி சிரமத்தில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com