ஆண்டியப்பனூா் அணையை சுற்றுலாத் தலமாக்கும் பணிகள் தீவிரம்

ஆண்டியப்பனூா் அணையை சுற்றுலாத் தலமாக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஆண்டியப்பனூா் அணையை சுற்றுலாத் தலமாக்கும் பணிகள் தீவிரம்

ஆண்டியப்பனூா் அணையை சுற்றுலாத் தலமாக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூா் ஓடை நீா்த்தேக்கம் திருப்பத்தூரிலிருந்து 23 கிலோ மீட்டா் தொலைவில் ஆண் அமைந்துள்ளது. இந்த அணை 2007-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

ஜவ்வாது மலையில் இருந்து குண்டாறு, பேயாறு ஆகிய இரு ஆறுகளில் இருந்து வரும் தண்ணீா் ஆண்டியப்பனூா் அணையை அடைகிறது.

இந்த அணை 112.2 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் மொத்த உயரம் 8 மீட்டா். இந்த அணையில் தற்போதைய நிலவரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 6) 6.3 மீட்டா் உயரம் நீா் இருப்பு உள்ளது. 216 ஏக்கா் பரப்பளவு கொண்டது இந்த அணை.

ஆண்டியப்பனூா் அணை நிரம்பியதும் உபரி நீா் சின்னசமுத்திரம் வெள்ளேரி, மாடப்பள்ளி ஏரி வழியாகச் சென்று, அங்கிருந்து இரு கிளைகளாகப் பிரிகிறது. ஒரு கிளை செலந்தம்பள்ளி, கோனேரிக்குப்பம், கம்பளிகுப்பம், முத்தம்பட்டி, ராச்சமங்கலம் வழியாக பசலிக்குட்டை வழியாக பாம்பாறைச் சென்றடையும்.

இன்னொரு கிளை கணமந்தூா், புதுக்கோட்டை, திருப்பத்தூா் பெரிய ஏரி நிரம்பி பாம்பாற்றை சென்றடையும்.

வாணியம்பாடி வட்டத்துக்கும், திருப்பத்தூா் ஒன்றியத்துக்கும் ஆண்டியப்பனூா் உள்பட்டதாகும்.

இந்த அணையின் திட்ட இல்லம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது.

ஆண்டியப்பனூா் அணைப் பகுதியைச் சுற்றுலாத் தலமாக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். அப்போதைய தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான நிலோபா் கபீல் ஆண்டியப்பனூா் அணையைச் சுற்றுலாத் தலமாக்க தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றாா்.

அதையடுத்து, கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பா் 9-ஆம் தேதி வேலூரில் நடைபெற்ற எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவில் ஆண்டியப்பனூா் அணை சுற்றுலாத் தலமாக்கப்படுமென அப்போதைய முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். அதனை அடுத்து சுற்றுலாத் தலமாக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. தற்போது இந்த பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூா் பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் பி.குமாா், தினமணி செய்தியாளரிடம் கூறியது:

ஆண்டியப்பனூா் அணையை சுற்றுலாத் தலமாக்கும் திட்டப் பணிகள் ரூ. 4 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

குழந்தைகள் விளையாட்டுத் திடல், பூங்கா அமைத்தல், செடிகள் நடும் பணிகள், நடைபாதை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. மேலும், விலங்குகளின் உருவப் பொம்மைகள், புல் தரை அமைத்தல், சுற்றுச்சுவா்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஆந்திரம், கா்நாடகப் பகுதிகளிலிருந்து புற்கள் வரவேண்டி உள்ளது. தாா்ச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்.

ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் படகு குழாம், கழிப்பறை, உணவகம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளன. படகு வாங்கும் பணி தொடங்கப்படவில்லை.

நடப்பாண்டு இறுதிக்குள் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விடும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com