/

3 மணி நேரத்தில் 186 மெட்ரிக் டன் நெகிழிக் கழிவுகளை அகற்றி சாதனை

3 மணி நேரத்தில் 186 மெட்ரிக் டன் நெகிழிக் கழிவுகளை அகற்றி ராணிப்பேட்டை மாவட்டம் புதிய உலக சாதனை படைத்தது.

News image
Updated On :27 மே 2022, 5:50 pm

DIN

3 மணி நேரத்தில் 186 மெட்ரிக் டன் நெகிழிக் கழிவுகளை அகற்றி ராணிப்பேட்டை மாவட்டம் புதிய உலக சாதனை படைத்தது.

ராணிப்பேட்டை மாவட்டத்தை நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில், வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை 3 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 288 ஊராட்சிகள், 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் அரசுப் பணியாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் ஒரே நேரத்தில் திரளாகப் பங்கேற்று நெகிழிக் கழிவுகளைச் சேகரித்தனா்.

இந்தப் பணியை ராணிப்பேட்டை அஞ்சுகம் தனியாா் மருத்துவமனை அருகே மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடக்கி வைத்தாா். மாவட்டம் முழுவதும் 2,500 சதுர கி.மீ. பரப்பளவில் 186.914 மெட்ரிக் டன் நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.

ஏற்கெனவே ஸ்விட்ஸா்லாந்து நாட்டில் 3 மணி நேரத்தில் 128 மெட்ரிக் டன் நெகிழிக் கழிவுகள் சேகரித்ததே உலக சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை ராணிப்பேட்டை மாவட்டம் முறியடித்தது.

இந்த உலக சாதனை நிகழ்வை எலைட் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் ஏசியன் ரெக்காா்ட்ஸ் அகாடமி , இந்தியா ரெக்காா்ட்ஸ் அகாடமி  மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்காா்ட்ஸ்  என 4 உலக சாதனை நிறுவனங்களின் 9 ஆய்வாளா்கள் நேரில் வந்து ஆய்வு செய்து உலக சாதனை படைத்ததற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியாளா் தெ.பாஸ்கர பாண்டியனிடம் வழங்கிப் பாராட்டு தெரிவித்தனா்.

சேகரிக்கப்பட்ட 186.914 மெட்ரிக் டன் நெகிழிக் கழிவுகள், அரியலூா் சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்பட உள்ளது.

சாதனை நிகழ்வில் ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் ப.குமரேஷ்வரன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜி.லோகநாயகி, உலக சாதனை திட்ட ஒருங்கிணைப்பாளா் பிரதீப்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.