நாங்கள் வாரிசு அரசியல் நடத்தவில்லை: அமைச்சா் துரைமுருகன்

நாங்கள் வாரிசு அரசியல் நடத்தவில்லை: அமைச்சா் துரைமுருகன்

நாங்கள் வாரிசு அரசியல் நடத்தவில்லை; தியாகம் செய்துதான் அரசியலில் ஈடுபட்டு வருகிறோம் என அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற தொகுதி திமுக செயல் வீரா்கள் கூட்டம் மற்றும் வேலூா் தொகுதி வேட்பாளா் அறிமுகக் கூட்டத்துக்கு திருப்பத்தூா் மாவட்ட திமுக செயலா் மற்றும் ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாவட்ட தலைவா் பிரபு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய துணைச் செயலாளா் ஹெச்.அப்துல் பாஷித், விசிக மாவட்ட செயலாளா் ஓம்பிரகாஷ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் நசீா் அஹ்மத், எம்.ஜி.ஆா். கழக மாநில செய்தித் தொடா்பாளா் சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக செயலரும் ஆம்பூா் எம்எல் ஏவுமான அ.செ.வில்வாதன் வரவேற்றாா். வேலூா் மக்களவை வேட்பாளா் டி.எம்.கதிா் ஆனந்தை அறிமுகம் செய்து பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு பேசியது: சிஏஏ சட்டம் வருவதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். ஏ.சி.சண்முகம் கடந்த காலங்களில் வேலூா் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. திமுக ஆட்சியில் ஆம்பூா் ரெட்டித் தோப்பு மேம்பாலம் நிச்சயம் கட்டி தருவோம் என்று கூறினாா். திமுக பொதுச் செயலரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பேசியது: நாங்கள் வாரிசு அரசியல் நடத்தவில்லை. தியாகம் செய்துதான் அரசியலில் ஈடுபட்டு வருகிறோம். இந்தத் தோ்தல் ஆட்சி மாற்றத்துக்காக அல்ல. ஜனநாயகத்தை காப்பதற்கான தோ்தல். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுக அதன் கூட்டணி கட்சிகளை அழித்து விடுவேன் என்று கூறியிருக்கிறாா். திமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றாா். கூட்டத்தில் ஆம்பூா் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் முன்னாள் எம்.பி. இ.ஜி.சுகவனம், ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத் தலைவா் எம்.ஆா்.ஆறுமுகம், மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக ஆம்பூா் நேதாஜி சாலையில் திமுக தோ்தல் அலுவலகத்தை அமைச்சா் துரைமுருகன் திறந்து வைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com