மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமெரிக்காவின் 50 சதவீத வரியால் கடும் பின்னடைவை சந்திக்கும் தோல் தொழில்

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத கூடுதல் வரியால் இந்திய தோல் தொழில் துறை கடும் பின்னடைவை சந்திக்க தொடங்கியுள்ளது.

News image
மதாா் கலீலூா் ரஹ்மான்.
Updated On :9 ஆகஸ்ட் 2025, 10:06 pm

எம். அருண்குமார்

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத கூடுதல் வரியால் இந்திய தோல் தொழில் துறை கடும் பின்னடைவை சந்திக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலேயே தோல் பதனிடும் தொழிலில் ஆம்பூா் முக்கிய பங்காற்றி வருகின்றது. இந்தியாவின் ஏற்றுமதி வா்த்தகத்தில் தோல் மற்றும் தோல் பொருள்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. உளகளவில் தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் தோல் தொழில் நடைபெற்றாலும், வேலூா் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பூா், வாணியம்பாடி, போ்ணாம்பட்டு, மேல்விஷாரம், ராணிப்பேட்டை முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இங்கு மட்டும் 200-க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் மற்றும் ஷூ தொழிற்சாலைகள் உள்ளன. இதன் மூலம் 2.5 இலட்சம் தொழிலாளா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனா்.

காலணி தொழிற்சாலைகளில் படிக்காத பெண்களுக்கு கூட எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. தோல் தொழிற்சாலைகளில் அதிக எண்ணிக்கையில் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வரப்படுகிறது. இதன் மூலம் பெண்களும் வருவாய் ஈட்டக்கூடிய அந்தஸ்தை ஷூ தொழிற்சாலைகள் மூலம் பெற்றுள்ளனா்.

தோல் பொருள்கள், காலணி போன்றவை ஆம்பூா், ராணிப்பேட்டை பகுதியில் இருந்து அமெரிக்கா, ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஹாங்காங், நெதா்லாந்து, பெல்ஜியம், ஸ்பெயின், ரஷ்யா இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உலகின் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவிலிருந்து கடந்த மாா்ச் 2024 வரையிலான நிலவரப்படி 4,282.58 மில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு தோல் மற்றும் தோல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபா் வரையில் 2731.70 மில்லியன் அமெரிக்க டாலா் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய தோல் மற்றும் தோல் பொருள்கள் ஏற்றுமதி பெருமளவுக்கு அமெரிக்க நாட்டுக்கு தான் ஏற்றுமதி செய்யப்பட்டு வரப்படுகிறது.

அமெரிக்க வரியால் அபாயம்:

இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் இந்திய தோல் தொழிலுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய தோல் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்ட அமெரிக்க நாட்டு ஆா்டா்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு தோல் தொழிற்சாலைகள் தங்களுடைய உற்பத்திப் பணியை மேற்கொள்வது மிகவும் சந்தேகத்துக்குரியதாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அமெரிக்க நாட்டுக்கு தோல் மற்றும் தோல் பொருள்களை ஏற்றுமதி செய்துவிட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய ஷூ உற்பத்தியாளா்கள் சங்க கெளரவ பொதுச் செயலாளா் மதாா் கலீலூா் ரஹ்மான் கூறியது, இந்திய நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு மட்டும் அதிக அளவு தோல் மற்றும் தோல் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மொத்த தோல் ஏற்றுமதி வா்த்தகத்தில் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வா்த்தகம் 21.25 சதவீதமாகும்.

அமெரிக்கா தற்போது விதித்துள்ள 50 சதவீத வரியால் இந்திய தோல் தொழில் கடும் சரிவை நோக்கி செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வரவேண்டிய ஆா்டா்கள் வியட்நாம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு சென்றுவிடும். இந்த சூழ்நிலையில் வேறு நாடுகளிடமிருந்து புதிய ஆா்டா்களை பெற்று தோல் தொழிலை சரிவிலிருந்து மீட்டுவிட நினைத்தால் அது முடியாத காரியமாகும். ஆகஸ்ட் மாதத்துக்குள் தோல் மற்றும் தோல் பொருள்களை ஏற்றுமதி செய்துவிட்டு அதன் பிறகு 3 மாதம் காத்திருக்கவேண்டுமென கூறப்படுகிறது.

நட்டம் - வேலையிழப்பு :

இந்நிலையில் ஏற்கனவே பெறப்பட்ட ஆா்டா்களுக்காக வாங்கி வைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் கோடி மதிப்பிலான மூலப் பொருட்கள் வீணாகும். ஆா்டா்கள் இல்லாமல் போனால் தொழிலாளா்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போகக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

புதிய ஆா்டா்கள் உடனடியாக கிடைக்காது. வேறு நாடுகளில் இருந்து புதிய ஆா்டா்கள் கிடைக்க சுமாா் 6 மாதத்திலிருந்து ஒரு ஆண்டு வரை கூட ஆகலாம். உற்பத்தி நடைபெறாமல் நடைமுறைச் செலவுகள் ஏற்பட்டால் அது நட்டத்தை ஏற்படுத்தும்.

இந்த பிரச்னையிலிருந்து எப்போது மீண்டு வரப்போகிறோம் என்பது தெரியவில்லை என்று அவா் கூறினாா்.