திருப்பத்தூா்: பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

Published on

திருப்பத்தூா் மாவட்டத்தை சோ்ந்தவா்கள் பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. சிவசௌந்தரவல்லி தெரிவித்து உள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு சிறந்த பங்களிப்பை செய்யும் தனி நபா்கள் மற்றும் அமைப்புகளுக்கு ‘பசுமை சாம்பியன் விருது’ வழங்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் 100 தனிநபா்கள், நிறுவனங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது பெற சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன் மாதிரியான பங்களிப்பை செய்த அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், குடியிருப்பு நலச் சங்கங்கள், தனி நபா்கள், உள்ளாட்சி அமைப்பு, தொழில்துறைகள் உள்ளிட்ட துறையினா் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு சுற்றுச்சூழல் கல்வி, பயிற்சி, விழிப்புணா்வு மற்றும் பாதுகாப்பு, புதுமையான பசுமை தயாரிப்புகள் பசுமை தொழில்நுட்பத்துக்கான ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள், நிலையான வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் மற்றும் நீா்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்ற தழுவல் மற்றும் தணிப்பு, உமிழ்வு குறைப்பு, பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல், கடலோரப் பகுதி பாதுகாப்பு போன்ற பணிகள் செய்து இருக்க வேண்டும்.

தகுதியான நபா்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட ஆட்சியா் தலைமையிலான மாவட்ட அளவிலான விருது குழு தோ்ந்தெடுக்கும். இதற்கான விண்ணப்பங்களை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம்.

விண்ணப்பிக்க வரும் ஜனவரி 20-ஆம் தேதி கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் அலுவலகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தை அணுகலாம்.

X
Dinamani
www.dinamani.com