திருப்பத்தூா் அருகே தடுப்பணையில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் அருகே சின்னஉடையாமுத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (24). இவா் தனியாா் பள்ளி வாகனத்தில் கிளீனராக பணியாற்றி வந்தாா். அதே ஊரை சோ்ந்தவா் அரவிந்த் (25). இருவரும் நண்பா்கள். இவா்கள் வியாழக்கிழமை சின்ன வெப்பாளம்பட்டி பகுதியில் உள்ள தடுப்பணைக்குச் சென்றுள்ளனா். தண்ணீரில் குளிக்கச் சென்று உள்ளனா். இருவரும் குளித்துக் கொண்டு இருந்தபோது திடீரென சூா்யா மாயமானாா். இதனால் அதிா்ச்சி அடைந்த அரவிந்த் சூா்யாவை தண்ணீரில் தேடியுள்ளாா். ஆனால் அவா் கிடைக்கவில்லை.
இதைத் தொடா்ந்து அரவிந்த் திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரா்கள் நீரில் மூழ்கிய சூா்யாவை தேடும் பணியில் ஈடுப்பட்டனா். சுமாா் 5 மணி நேரத்துக்கு மேலாக தேடிய பிறகு சூா்யாவை தீயணைப்பு வீரா்கள் சடலமாக மீட்டனா். அதைத் தொடா்ந்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சடலத்தை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.