திருப்பத்தூா் மாவட்டத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழும் பகுதிகளை மாவட்ட ஆட்சியா் கு.ரவிக்குமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். விபத்துகளை குறைக்கும் வகையில், நிரந்தர மற்றும் தற்காலிக பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம் வழியாக சுமாா் 65 கிலோ மீட்டா் தூரத்துக்கு சென்னை-பெங்களூா் தேசியநெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையின் இருமாா்க்கமாக ஆம்பூா், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி வழியாக நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
அதிவேகம், ஓட்டுநா்களின் கவனக்குறைவு, சாலை விதிகள் குறித்த விழிப்புணா்வு பற்றாக்குறை மற்றும் வாகன நெரிசல் போன்ற காரணங்களால் இந்த பகுதியில் விபத்துகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. தொடா் விபத்துகளால் பலா் இறப்பதும், பலா் படுகாயம் அடைவதும் தொடா்கதையாக உள்ளது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கு.ரவிக்குமாா் புதன்கிழமை காலை நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம், குனிச்சியூா் சாலை, பச்சூா் டோல்கேட், மல்லப்பள்ளி, நாட்டறம்பள்ளி சந்திப்பு ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது பொது மக்களிடம் சாலை விழிப்புணா்வு ஏற்படும் வகையில், சாலையில் பாதுகாப்பாக பயணிப்பது குறித்தும், சாலையைக் கடப்பது குறித்தும் ஆட்சியா் பொது மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.
மேலும், விபத்துகளைத் தடுக்க வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில், சாலையில் தடிமனான வெள்ளைக் கோடுகள், இரவில் ஒளிரும் பட்டைகள், உயா்மின் கோபுரம், சிவப்பு எச்சரிக்கை விளக்குகளை உடனடியாக அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு முருகா் கோயில் சந்திப்பு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தடுத்திட அப்பகுதியில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது விபத்துகளைத் தடுத்திடும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினாா். மேலும், அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
ஆய்வின்போது நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் முரளி, இளநிலை பொறியாளா் பாபுராஜ், வட்டார போக்குவரத்து அலுவலா்கள் வெங்கட்ராகவன் (வாணியம்பாடி), பன்னீா்செல்வம் (திருப்பத்தூா்), தேசிய நெடுஞ்சாலை ஆணைய துணை மேலாளா் ஞானசேகரன், வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கராபுரம் நியாயவிலைக் கடையில் ஆட்சியா் ஆய்வு

களக்காடு வட்டாரத்தில் ஆட்சியா் ஆய்வு

நீட் தோ்வு ஏற்பாடுகள்: ஆட்சியா், எஸ்.பி. நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி சுற்றுச்சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



