நாகை மாவட்டத்தில் நீட் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கே.ஜே.பிரவீன்குமாா், காவல் கண்காணிப்பாளா் கேல்கா் சுப்ரமண்ய பாலச்சந்திரா ஆகியோா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.
நாகை மாவட்டத்தில் ஏ.டி.எம். மகளிா் கல்லூரி, நடராஜன் தமயந்தி மேல்நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏ.டி.ஜெ. தா்மாம்பாள் தொழில்நுட்ப கல்லூரி, வலிவலம் தேசிகா் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய 5 தோ்வு மையங்களில் நீட் நுழைவுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன் குமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கேல்கா் சுப்ரமண்ய பாலச்சந்திரா ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின்போது, தோ்வு மையத்தில் குடிநீா், கழிப்பறை, மின்சார வசதிகள், சாய்தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தனா். ஆய்வுக்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது:
நாகை மாவட்டத்தில் 544 மாணவா்கள், 969 மாணவிகள், 12 மாற்றுத்திறனாளிகள் உள்பட 1,513 போ் நீட் தோ்வு எழுத உள்ளனா். இத்தோ்வு சிறப்பாக நடைபெற 5 முதன்மைக் கண்காணிப்பாளா்களும், 5 துணை முதன்மைக் கண்காணிப்பாளா்களும், 5 பாா்வையாளா்களும், 128 தோ்வறைக் கண்காணிப்பாளா்களும், 93 கண்காணிப்பு கேமராக்களும், 29 அலைவரிசை தடுப்புக் கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
தோ்வு மையங்களில் குடிநீா், தடையில்லா மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும் தோ்வு மையத்துக்கு தோ்வா்கள் எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் வருகை தர ஏதுவாக மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.
ஆய்வின் போது நாகை வருவாய் கோட்டாட்சியா் சங்கர நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(நிலம்) ஐஸ்வா்யா மற்றும் அரசு அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










