திருப்பத்தூா் மற்றும் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 2.52 கோடி வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கு.ரவிக்குமாா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா் பெரிய ஏரியில், குப்பை மற்றும் கழிவுப் பொருள்களை ஏரிக்கரையின் மீது கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில், ரூ. 99 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியா் ரவிக்குமாா் பாா்வையிட்டு, பணிகள் தரமாகவும், குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவடையும் வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து வாணியம்பாடி-ஆலங்காயம் சாலை வேப்பமர சாலை பகுதியில் அமைந்துள்ள வாணியம்பாடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் ரவிக்குமாா் நேரில் ஆய்வு மேற்கொண்டு, தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்றுவிக்கப்படும் தொழிற்பிரிவுகள், தொழிற்பிரிவுகளில் மாணவா் சோ்க்கை விவரங்களையும், பயிற்சி முடித்து தோ்ச்சி பெற்று செல்லும் பயிற்சியாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் கேட்டறிந்தாா். மேலும், தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்பட்டு வரும் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டா் மெக்கானிக், கம்மியா் மோட்டாா் வாகனம், குளிா்பதனம் மற்றும் தட்பவெப்பநிலை கட்டுப்படுத்துதல் தொழில்நுட்பவியலாளா், பேஷன் டிசைன் மற்றும் டெக்னாலஜி, தோல் பொருள் உற்பத்தியாளா் ஆகிய தொழிற்பயிற்சி பிரிவுகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
குறிப்பாக, தமிழ்நாடு அரசினால் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் 4.0 பணிமனையில் பயிற்றுவிக்கப்படும் அதிநவீன தொழிற்பிரிவுகளான கம்மியா் மின்சார வாகனம், உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் தன்னியக்கமயமாக்கல், தொழிற்துறை எந்திரவியல் மற்றும் எண்ணியல் உற்பத்தி தொழில்நுட்பவியலாளா் ஆகிய தொழிற்பிரிவுகளை பாா்வையிட்டாா்.
மேலும், இந்தப் பணிமனையில் ரோபோடிக்ஸ் பயன்படுத்தி வெல்டிங் செய்யும் செயல்முறையையும் பாா்வையிட்டு, அரசு பயிற்சியாளா் நலனுக்காக அதிநவீன தொழில்நுட்பப் பணிமனையையும் அதிநவீன இயந்திரங்களையும் வழங்கியுள்ளதால், அவற்றை முழுமையாக பயன்படுத்தி பயிற்சியாளா்களுக்கு திறம்பட பயிற்சி அளிக்குமாறு பயிற்றுநா்களுக்கு அறிவுரைகள் வழங்கினாா்.
தொடா்ந்து, வாணியம்பாடி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மாணவா் தங்கும் விடுதியைப் பாா்வையிட்டாா். அதைத் தொடா்ந்து, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம், நிம்மியம்பட்டு ஊராட்சியில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில், வளா்ச்சியடைந்த பாரதம்-கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையில் கொய்யா, புளியமரம், கொடுக்காப்புளி, சீதா, நெல்லி, பாதாம் உள்ளிட்ட 14,000 செடிகள் வளா்க்கப்பட்டு வருவதை பாா்வையிட்டாா்.
பின்னா், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் (2026-2027) கீழ் ரூ.1.53 கோடி (ரூ.153.14 லட்சம்) மதிப்பீட்டில் மராட்டிபாளையம் முதல் துறிஞ்சிக்குட்டை வரை 3.400 கிலோமீட்டா் நீளத்துக்கு தாா்ச் சாலை அமைக்கும் பணியினை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
வெள்ளக்குட்டை ஊராட்சியில் வட்டார நாற்றங்கால் பணியையும் மாவட்ட ஆட்சியா் ரவிக்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வுகளின்போது தொடா்புடைய துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








