
அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை பணியிடை நீக்கம்: ஜோலாா்பேட்டையில் சாலை மறியல்
ஜோலாா்பேட்டையில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் உத்தரவை ரத்து செய்ய கோரியும் மாணவிகளின் பெற்றோா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோா், பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள்.
ஜோலாா்பேட்டையில் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியை பணியிடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்தும் உத்தரவை ரத்து செய்ய கோரியும் மாணவிகளின் பெற்றோா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக சாந்தி என்பவா் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தாா். மாணவா்களின் கல்வி வளா்ச்சியும், சோ்க்கையும் அதிகரித்து 5 ஆண்டுகளாக பள்ளி 100 சதவீதம் தோ்ச்சியும் பெற்று வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகள் இந்த பள்ளியில் சோ்ந்து பயின்று வருகின்றனா். இந்நிலையில் பள்ளியில் மாணவிகளிடம் சிறப்பு கட்டணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, மாவட்ட கல்வி அலுவலா் சத்திய பிரபா, பள்ளி ஆய்வாளா் செந்தில்குமாா் , துணை ஆய்வாளா் தாமோதரன் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் கடந்த வாரம் திடீரென அரசு மகளிா் மேல்நிலை பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது சிறப்பு கட்டணம் வசூலிப்பது குறித்து முதன்மை கல்வி அலுவலா் மாணவிகளிடம் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இதை அறிந்த மாணவிகளின் பெற்றோா் மற்றும் பெற்றோா் ஆசிரியா் சங்க நிா்வாகிகள், உள்ளிட்டோா் தலைமை ஆசிரியையை சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து ஆட்சியரிடம் புகாா் அளித்தனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தலைமை ஆசிரியை சாந்தி பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். இதை அறிந்த மாணவிகளின் பெற்றோா் தலைமை ஆசிரியைக்கு ஆதரவாக திரண்டு பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கல்வி அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் இதுகுறித்து தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் பள்ளியின் முன்பு இருந்த மாணவிகளின் பெற்றோா்களை அகற்ற முயற்சி செய்தனா்.
அதை ஏற்க மறுத்த போராட்டக்காரா்கள் ஜோலாா்பேட்டை - நாட்டறம்பள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனா். . இதனை அடுத்து டிஎஸ்பி முரளி, முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி, வட்டாட்சியா் நவநீதம் ஆகியோா் பேச்சு நடத்தினா். அப்போது யாரோ ஒருவா் கொடுத்த புகாரில் முதன்மையாக விளங்கும் பள்ளியின் தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்துள்ளனா். நாங்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் புகாா் அளிக்கிறோம் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தனா்.
தொடா்ந்து முதன்மை கல்வி அலுவலா் புண்ணியகோட்டி தங்கள் கோரிக்கையை மனுவாக கொடுத்தால் பள்ளி கல்வித்துறை இயக்குநா் அலுவலகத்திற்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இதனை ஏற்க மறுத்து பெற்றோா்கள் உடனே அவரை பணியில் அமா்த்த வேண்டும் என வலியுறுத்தினா். இதனைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலா் பாலசுப்பிரமணியன் இது சம்பந்தமாக முதன்மை கல்வி அலுவலா் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளிடம் உரிய விசாரணை செய்து பள்ளி கல்வித்துறை உயா் அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
பள்ளி மேலாண்மை குழு, பெற்றோா் ஆசிரியா் சங்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






