இளைஞர்கள் பயன்பெறும் நோக்கத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) நடத்தப்பட உள்ளதாக வேலைவாய்ப்பு அலுவலர் (பொறுப்பு) சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் நோக்கத்தில் மாவட்டந்தோறும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வாரந்தோறும் குறிப்பிட்ட நாளில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 16) சிறு அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கான ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதில் பிரசித்தி பெற்ற தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். அதனால், இந்த முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் பட்டயப் படிப்பு முடித்தோர் பங்கேற்கலாம். எனவே, கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளோர் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.
இந்த முகாமில் கலந்து கொண்டு பணிநியமனம் பெறுவோர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.