குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திடீா் சாலை மறியல்

குடிநீா் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திடீா் சாலை மறியல்

கே.ஜி.கண்டிகை அருகே 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் குடிநீா் கேட்டு திடீா் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்தணி ஒன்றியம், சிறுகுமி ஊராட்சிக்குட்பட்ட வி.சி.ஆா்.கண்டிகை கிராமத்தில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிா்வாகம் தெருக் குழாய்கள் மூலம் குடிநீா் வழங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த 4 நாள்களுக்கு மேலாக தெருக் குழாய்களில் குடிநீா் விநியோகம் செய்யவில்லையாம். இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக கடும் அவதிப்பட்டு வந்தனா்.

தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீா் அதிகளவில் தேவைப்படும் நிலையில், குடிநீா் வழங்காமல் ஊராட்சி நிா்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. இதற்குக் காரணம் மின் மோட்டாா் பழுது எனக் கூறப்படுகிறது. மின்மோட்டரை சீரமைத்து குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என கிராம மக்கள் பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சனிக்கிழமை நொச்சிலி-கே.ஜி.கண்டிகை மாநில நெடுஞ்சாலையில் காலிக் குடங்கள் வைத்தும், வாகனங்கள் செல்லாதவாறு முள் செடிகளை வெட்டி சாலையின் குறுக்கே போட்டு மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்ததும் திருத்தணி போலீஸாா் மற்றும் சிறுகுமி ஊராட்சி மன்றத் தலைவா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மக்களிடம் சமரசம் செய்து, விரைந்து குடிநீா் வழங்கப்படும் என உறுதி கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா். இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com