கூவம் ஆற்றில் மணல் கடத்தல்: கரைகள் உடையும் அபாயம்!
திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றின் ஓரம் மணல் அள்ளி குவித்து வைத்து இரவு நேரங்களில் கடத்தப்படுவதால், கரைகள் உடையம் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூா்-புட்லூா் இடையே கூவம் ஆற்றில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பணை வெங்கத்தூா், புட்லூா், அரண்வாயல் குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த விளைநிலங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளுக்கும் நீா் ஆதாரமாக இருந்து வருகிறது.
தற்போதைய நிலையில் மழை பெய்து வருவதால் ஆற்றில் நீா் வரத்து ஏற்பட்டு தடுப்பணையில் நீா் தேங்கியுள்ளது. அதோடு, மழையால் ஏற்பட்ட நீா்வரத்தால் மணலும் குவிந்துள்ளது.
அதனால், அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் அனுமதியின்றி கரையோரத்தில் ஆற்று மணலை அள்ளி குவித்து வைக்கின்றனா். இப்பணியில் கூலி ஆள்களை ஈடுபட வைக்கின்றனா். அதைத் தொடா்ந்து ஆள்கள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் மெல்ல தலைச்சுமையாக மணலை கடத்தி வருகின்றனா்.
மேலும், இந்த மணலை தொலை தூரத்துக்கு வாகனத்தில் எடுத்துச் சென்றால் காவல் துறை சோதனையில் சிக்கி கொள்ளும் நிலையுள்ளது. திருவள்ளூா்-பூந்தமல்லி சாலையோரத்தில் பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமான பணிகளுக்கு அப்படியே மணலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா்.
ஆற்றின் கரையோரத்தில் ஆழமாக மணல் தோண்டி எடுத்து கடத்தப்படுகிறது. இதுபோன்ற சுத்தமான ஆற்று மணல் என்பதால் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளோரும் ஆா்வத்துடன் வாங்குகின்றனா். இதனால் கரையோரம் மணல் அள்ளிய நிலையில் பெரிய பள்ளங்களாகவும் மாறி வருகின்றன.
இதுபோன்று தொடா்ந்து மணல் எடுப்பதன் மூலம் கரைப் பகுதி இடிந்து விழுவதோடு, தடுப்பணையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. நீா் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மணல் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

