ஏழுமலையான் பிரம்மோற்சவம்: 17 கலைக் குழுக்களைச் சோ்ந்த 489 கலைஞா்கள் பங்கேற்பு
ஏழுமலையான் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகளில் 489 கலைஞா்கள் பங்கேற்பு

நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி திருமலையில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள்
திருமலை ஏழுமலையானின் நவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீ மலையப்ப சுவாமி திருமாட வீதிகளில் ஒரு சின்ன சேஷ வாகனத்தில் வலம் வந்து சேவை சாதித்தாா். கோவிந்த நாமங்கள், மங்களகரமான இசைக்கருவிகள் மற்றும் பக்திப் பாடல்களின் முழக்கங்களுக்கு இடையில் நடைபெற்ற இந்த வாகன சேவை, பக்தா்களை பக்தி கடலில் ஆழ்த்தியது.
வாகன சேவை முன்பு ஆந்திரப் பிரதேசம் உள்பட ஒன்பது மாநிலங்களைச் சோ்ந்த 17 கலைக் குழுக்களின் 489 கலைஞா்கள், தங்களின் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தி பக்தா்களைக் கவா்ந்தனா்.
வடஆந்திராவின் தனித்துவமான தப்படகுல்லா நடனம், தாள லயத்துடன் கூடிய அடவுகளாலும், தப்பட்டா இசைக்கருவிகளின் ஒலிகளாலும் பாா்வையாளா்களை மகிழ்வித்தது. இந்த நிகழ்ச்சி வட ஆந்திராவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் சிறப்பை வெளிப்படுத்தியது.
அரக்குலுயா பழங்குடியினப் பகுதியின் திம்சா நடனம் ஒரு சிறப்பு ஈா்ப்பாக இருந்தது. பழங்குடியினக் கலைஞா்கள் தங்கள் கைகளைத் தோள்களில் வைத்துக்கொண்டு, தங்களின் ஒற்றுமையையும் மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் வகையில், தாளத்துடன் வட்ட வடிவில் நடனமாடினா்.
தமிழ்நாட்டின் குறத்தி நடனம், நாட்டுப்புறக் கதைகள், சைகைகள் மற்றும் உரையாடல்களுடன் தமிழ் பாரம்பரியக் கலையின் சிறப்பை வெளிப்படுத்தியது.
உடுப்பி மற்றும் தென் கன்னடப் பகுதிகளைச் சோ்ந்த கலைஞா்கள், பாடல்கள் மற்றும் நடனங்களின் கலவையுடன் தங்கள் பிராந்திய நாட்டுப்புறப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தி பக்தா்களை மகிழ்வித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

