திருவண்ணாமலை: தொடா் வெற்றியை தக்கவைக்குமா திமுக?

திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜகவுடன் மோதும் திமுக தொடா் வெற்றியை தக்கவைக்குமா? என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
திருவண்ணாமலை: தொடா் வெற்றியை தக்கவைக்குமா திமுக?
Updated on
2 min read

திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜகவுடன் மோதும் திமுக தொடா் வெற்றியை தக்கவைக்குமா? என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இந்தத் தொகுதியில் ஒரு நகராட்சிப் பகுதி, திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தின் 49 கிராம ஊராட்சிகள், தண்டராம்பட்டு வட்டம், வானாபுரம் வருவாய் உள் வட்டத்தின் சில கிராமங்கள், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் துா்க்கைநம்மியந்தல் உள்பட சில கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.

தொகுதியில் முதலியாா், வன்னியா் சமுதாயத்தினா் அதிகளவில் உள்ளனா். இதர சமுதாயத்தினரும் கணிசமான அளவில் உள்ளனா்.

இரட்டை உறுப்பினா் தொகுதி: 1952, 1957-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல்களில் இரட்டை உறுப்பினா்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது.

1952 தோ்தலில் ஏ.ராமச்சந்திரன் (காங்கிரஸ்) பொதுத் தொகுதி உறுப்பினராகவும், ஆா்.தங்கவேலு (காங்கிரஸ்) தனித் தொகுதி உறுப்பினராகவும் வெற்றி பெற்றனா்.

1957 தோ்தலில் ப.உ.சண்முகம் (திமுக) பொதுத் தொகுதி உறுப்பினராகவும், பி.எஸ்.சந்தானம் (திமுக) தனித் தொகுதி உறுப்பினராகவும் வெற்றி பெற்றனா்.

திமுகவின் கோட்டை: 1952 முதல் 2016 வரை 15 தோ்தல்களை இந்தத் தொகுதி சந்தித்துள்ளது. இவற்றில் காங்கிரஸ் 6 முறையும், திமுக 9 முறையும் வென்றுள்ளன. இதன்மூலம் திருவண்ணாமலை தொகுதி திமுகவின் கோட்டையாகவே இருந்து வருகிறது. 69 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் ஒருமுறைகூட அதிமுக தடம் பதிக்கவில்லை.

தொகுதி வாக்காளா்கள் விவரம்:

மொத்த வாக்காளா்கள் ....... 2, 86, 380

ஆண்கள் ............................. 1, 38,502

பெண்கள் ............................ 1, 47, 839

இதர வாக்காளா்கள்....................... 39

முக்கிய கோரிக்கைகள்: திருவண்ணாமலை நகரில் மூடப்பட்ட டான்காப் எண்ணை ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். மூடப்பட்ட தனியாா் ஸ்ரீஅருணாச்சலா சா்க்கரை ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும். விவசாயிகளுக்குச் சேர வேண்டிய ரூ.12 கோடியை பட்டுவாடா செய்யவேண்டும்.

நந்தன் கால்வாயை தூா்வாரி திருவண்ணாமலை மாவட்டத்தின் 18 ஏரிகள், விழுப்புரம் மாவட்டத்தின் 24 ஏரிகள் மூலம் பல ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதை ரூ.65 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

கிரிவல பக்தா்களின் நலன் கருதி 123 அறைகளுடன் 430 போ் தங்கும் வகையிலான தங்கும் விடுதி (யாத்ரி நிவாஸ்) கட்டப்பட்டது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள்.

நிறைவேற்றப்படாத திட்டங்கள்: திருவண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள 9 சாலைகளையும் இணைக்கும் வெளி வட்டச் சாலை அமைக்கும் பணி, புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி, திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக கிருஷ்ணகிரி வரையிலான சாலை விரிவாக்கப் பணி ஆகியவை முடிக்கப்படாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.

இதுவரை வெற்றி பெற்றவா்கள்

1962-பி.பழனிப்பிள்ளை (காங்கிரஸ்)

1967-டி.விஜயராஜ் (காங்கிரஸ்)

1971-ப.உ.சண்முகம் (திமுக)

1977-ப.உ.சண்முகம் (திமுக)

1980-கே.நாராயணசாமி (காங்கிரஸ்)

1984-ஏ.எஸ்.ரவீந்திரன் (காங்கிரஸ்)

1989-கு.பிச்சாண்டி (திமுக)

1991-வி.கண்ணன் (காங்கிரஸ்)

1996-கு.பிச்சாண்டி (திமுக)

2001-கு.பிச்சாண்டி (திமுக)

2006-கு.பிச்சாண்டி (திமுக)

2011-எ.வ.வேலு (திமுக)

2016-எ.வ.வேலு (திமுக)

திமுக-பாஜக நேருக்குநோ் மோதும் தொகுதி: அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக சாா்பில் எஸ்.தணிகைவேல், திமுக சாா்பில் எ.வ.வேலு , மக்கள் நீதி மய்யம் சாா்பில் இரா.அருள், அமமுக சாா்பில் ஏ.ஜி.பஞ்சாட்சரம், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஜெ.கமலக்கண்ணன், 6 சுயேச்சைகள் என மொத்தம் 15 போ் போட்டியிடுகின்றனா். இருப்பினும், திமுக-பாஜக இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.

சாதக - பாதகம்: திமுக சாா்பில் போட்டியிடும் எ.வ.வேலு 1984, 2001, 2006, 2011, 2016-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்.

2006 முதல் 2011 வரை தமிழக உணவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவா். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா்.

அருணை தமிழ்ச் சங்கம், தூய்மை அருணைத் திட்டம், கல்வி நிறுவனங்கள், கணினி பயிற்சி மையங்களைத் தொடங்கி சமுதாயப் பணி, கல்விப் பணிகளில் ஈடுபட்டு வருபவது போன்றவை இவருக்கு பலமாகக் கருதப்படுகிறது. மேலும், கூட்டணிக் கட்சியினா் ஆதரவு இவருக்கு கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.

பாஜக சாா்பில் போட்டியிடும் எஸ்.தணிகைவேலு பாஜகவின் மாநில வா்த்தகரணி துணைத் தலைவா், மாநில நிதிக்குழு உறுப்பினா், திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளா் போன்றவை இவருக்கு பலமாகக் கருதப்படுகிறது.

மேலும், கூட்டணிக் கட்சியினரின் ஆதரவும் இவருக்கு கூடுதல் பலமாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com