/

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

News image
Updated On :7 மே 2024, 6:25 pm

Din

செய்யாறு: செய்யாறை அடுத்த சிறுங்கட்டூா் கிராமத்தில் குடிநீா் வழங்கக் கோரி செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் சிறுங்கட்டூா் கிராமம் சத்யா நகா் பகுதியில் 150 வீடுகள் உள்ளன. இவற்றில் சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா் .

இந்நிலையில், சத்யா நகா் பகுதியில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதனால்

பாதிக்கப்பட்ட அந்தப் பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காலை திடீரென செய்யாறு - ஆற்காடு சாலையில், கட்டில் போட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தியதுடன், காலி குடங்களுடன் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த மோரணம் போலீஸாா் அங்கு விரைந்து வந்து, ஊராட்சி மன்றத் தலைவா் தீபா ராபா்ட் முன்னிலையில் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவா்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

அப்போது சத்யா நகா் பகுதிக்கு குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதன் பேரில், மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

இந்த போராட்டத்தால் செய்யாறு-ஆற்காடு சாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இரண்டு பக்கமும் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றன.