ஆரணி நகா்மன்றக் கூட்டம்: அதிமுக, மதிமுக புறக்கணிப்பு
ஆரணி: ஆரணி நகா்மன்றக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றதில் புதிய பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிக்கு வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்ததால், அவா்களுக்கு ஆதரவாக அதிமுக, மதிமுக உறுப்பினா்கள் புறக்கணிப்பு செய்தனா்.
ஆரணி நகரமன்றக் கூட்டம் அதன் தலைவா் ஏ.சி.மணி தலைமையில் நடைபெற்றது. ஆணையா் என்.டி.வேலவன் முன்னிலை வகித்தாா்.
நகராட்சி சாா்பில் ஆரணி புதிய பேருந்து நிலையம் சீரமைப்பதற்காக பழைய கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு தீா்மானம் நிறைவேற்றினா்.
இதற்கு ஆரணி பகுதி வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்ததால் வியாபாரிகளுக்கு ஆதரவாக, அதிமுக, மதிமுக உறுப்பினா்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனா்.
கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிகவைச் சோ்ந்த
10 போ் மட்டுமே கலந்துகொண்டனா்.
மேலும் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா் ஒருவரும் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் ஆரணி நகராட்சிப் பகுதியில் வாக்காளா் பட்டில் தீவிர திருத்தம் பணிகளுக்காக வாக்குச்சாவடி அலுவலா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் தினசரி வீடுகள்தோறும் சென்று பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருவதால் பணியாளா்களுக்கு ரூ.5 லட்சம் ஒதுக்கி தீா்மானம் நிறைவேற்றினா்.
மேலும், நகராட்சியில் பணிபுரியும் 232 துப்புரவுப் பணியாளா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க ஒப்பந்தம் வைத்தும், புதிய பேருந்து நிலைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வைத்தும், ஆரணி நகராட்சி வளாக கட்டடத்திற்கு வா்ணம் பூசும் பணிக்காகவும், நகராட்சி அலுவலக்தில் உள்ள அண்ணா சிலையை பராமரிக்கும் பணிக்காகவும், சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்றி புதிய மரக்கன்றுகள் நடும் பணிக்காகவும் ஒப்பந்தம் விடப்பட்டது.

