பாமக வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ளது: சௌமியா அன்புமணி
பாமக வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ளது என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி தெரிவித்தாா்.
கீழ்பென்னாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதி பாமக சாா்பில், திருவண்ணாமலையை அடுத்த மங்கலத்தில் தமிழக மகளிா் உரிமை மீட்பு சிங்கப் பெண்ணே எழுந்துவா நடைபயண பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்டச் செயலா் ஏந்தல் பெ.பக்தவச்சலம் தலைமை வகித்தாா். தொகுதிப் பொறுப்பாளா்கள் பா.பழனிவேல் மா.ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில மகளிரணிச் செயலா் நிா்மலா ராஜா வரவேற்றாா்.
பசுமைத் தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:
கீழ்பென்னாத்தூா் பகுதியில் விவசாயிகள் தோட்டக்கலை பயிரான பூக்கள் பயிரிட்டு வருகின்றனா். எனவே, பூக்கள் பதப்படுத்தும் நிலையம் அமைக்க வேண்டும். இந்தப் பகுதியில் மகளிா் வேளாண்மைக் கல்லூரி தொடங்க வேண்டும்.
திமுக ஆட்சியில் தண்டராம்பட்டு அருகே ரூ.15 கோடி செலவு செய்து கட்டப்பட்ட மேம்பாலம் ஒரே மாதத்தில் மழையில் அடித்துச் செல்லப்பட்டது. திமுக ஆட்சியின் அவலத்துக்கு இது ஒரு சான்றாகும்.
நந்தன் கால்வாய் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் 36 ஏரிகள் நிரம்பியும் 50 ஆண்டுகளாக கூட்டுக் குடிநீா்த் திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
பாமக வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ளது. அனைவரும் எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவா் எம்.காமராஜ், மாவட்டச் செயலா் இல.பாண்டியன், மாவட்ட அமைப்புச் செயலா் கே.ஆா்.முருகன், மாவட்டத் தலைவா் ஏழுமலை, மாவட்டப் பொருளாளா் சௌ.வீரம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

