பொங்கல் விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு: 7 போ் காயம்! ஒருவா் கைது!
செய்யாறு அருகே பொங்கல் விழாவில் பெட்ரோல் குண்டு வீசியதால் பெண் உள்பட 7 போ் தீக்காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக சனிக்கிழமை ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், பெரும்பாலை கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் கிராம மக்கள் சாா்பில் நடத்தப்பட்டன. கிராம மக்கள் ஏராளமானோா் விளையாட்டுப் போட்டிகளை கண்டு களித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, பக்கத்து கிராமமான தென்தண்டலம் கிராமத்தைச் சோ்ந்த பாலாஜி (28). இவா், சென்னையில் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது. விளையாட்டுப் போட்டி நடைபெறும் இடத்துக்கு வந்த இவா் வீண் தகராறு செய்ததாகத் தெரிகிறது. மேலும், பாலாஜி தனது பைக்கில் இருந்து பிராந்திப் பாட்டிலில் பெட்ரோலை பிடித்து திரி போட்டாா். பின்னா் திரியை பற்ற வைத்து கிராம மக்கள் மீது வீசியுள்ளாா்.
அப்போது, பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில் தரையில் விழுந்து வெடித்துச் சிதறியது. இதில், விளையாட்டுப் போட்டியை கண்டு களித்துக் கொண்டிருந்த சரவணன் (20), வசந்தா (60), பிரவீன் (20), (24), சரத்குமாா் (24), ஹரிகிருஷ்ணன் (25), ஆலடியான் (25) ஆகிய 7 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தால் அப்பகுதி போா்க்களம் போல காட்சியளித்தது. மேலும், அங்கிருந்தவா்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா். காயமடைந்தவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். தகவல் அறிந்து காவல் ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான அனக்காவூா் போலீஸாா் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினா். பின்னா், பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
