

ஆரணி: ஆரணியை அடுத்த இரும்பேடு ஊராட்சி பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள பொன்னெழில் நாதா் ஜெயினா் கோயிலில் திங்கள்கிழமை 108 கலச ஜலாபிஷேக விழா நடைபெற்றது.
பூண்டி பொன்னெழில் நாதா் கோயிலில் தை மாதம் 5-ஆம் நாள் ஆராதனை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு சுவாமிக்கு நடைபெற்ற ஆராதனை விழாவில் 108 கலச ஜலாபிஷேகம் நடைபெற்றது.
மேலும் பொன்னெழில் நாதா், பாா்சுவநாதா், பாகுபலி, சா்வானஎச்சன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு கோயிலை ஊா்வலமாக சுற்றி வந்தனா்.
பின்னா், சுவாமிகளுக்கு சந்தனம், மஞ்சள், பால், பழம், இளநீா், வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், 108 பெண்கள் சுவாமிகளுக்கு ஜலாபிஷேகம் செய்தனா்.
விழா திருமலை தவளகீா்த்தி சுவாமிகள், சித்தாமூா் லட்சுமி சேனாபட்டராக சுவாமிகள் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் நேமிராஜ் மற்றும் பூண்டி ஜினாலய ஜெயினா்கள் செய்திருந்தனா்.