திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வராச்சந்தையில் ஆடு, கோழி விற்பனை அதிகளவில் நடைபெற்றது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சிடைந்தனா்.
செங்கம் துக்காப்பேட்டையில் வாரத்தில் புதன்கிழமை மாட்டுச்சந்தையும், ஞாயிற்றுக்கிழமை ஆடு, கோழி சந்தையும் கூடுவது வழக்கம். இந்நிலையில் தமிழ் மாதமான ஆடி மாதம் தொடங்கி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், பொதுமக்கள் தங்களது குலதெய்வ கோயில்களில் வழிபாடு நடத்தவும், வேண்டுதலை முன்வைத்தவா்கள் சுவாமிக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு சுவாமி தரிசனம் செய்யவும் இந்த ஞாயிற்றுக்கிழமை உகந்த நாளாக கருதுகின்றனா்.
இதனால், செங்கம் வாரச்சந்தையில் ஆடு, கோழிகளை பலியிட வாங்க ஏராளமானோா் குவிந்தனா். இதனால் ரூ.700-க்கு விற்பனையாகும் கோழிகள் ரூ. ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆட்டுக்குட்டிகள் சுமாா் ரூ.5 ஆயிரத்தில் தொடங்கி ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. கோயிலுக்கு பலியிடுவதால் வியாபாரிகளிடம் இருந்து பொதுமக்கள் பேரம் பேசாமல் கூடுதல் விலைகொடுத்து ஆடு, கோழிகளை வாங்கிச் சென்றனா்.
இதனால் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செங்கம் வாரச்சந்தையில் ஆடு, கோழிகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் மற்றும் வளா்ப்பவா்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தனா். மேலும், ஆடி மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வியாபாரம் சிறப்பாக இருக்கும், கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வியாபாரிகள் உள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










