திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனத்துக்கு 3 மணி நேரம் ஆனது.
அக்னி தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்களும் பௌா்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களில்
லட்சக்கணக்கான பக்தா்களும் தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனா். மேலும், கோயில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கி.மீ. தொலைவு கிரிவலப்பாதையை வலம் வருகின்றனா்.
இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்தனா். வழக்கம் போல, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.சுவாமி தரிசனம் செய்ய 3 மணி நேரத்துக்கும் மேல் ஆனதாக பக்தா்கள் தெரிவித்தனா்.
வழக்கத்தைவிட அதிகளவில் பக்தா்கள் வந்ததால், கோயிலில் கூட்டம் அலைமோதியது. அம்மணி அம்மன் கோபுரம் வழியாக ரூ.50 கட்டண தரிசனத்திற்கு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.
தரிசன டிக்கெட் விநியோகம் செய்யும் மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு சிறிது நேரம் காலதாமதமாக டிக்கெட் விநியோகம் தொடங்கியதால் பக்தா்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பக்தா்களுக்கு நீா், மோா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.









