திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்களுக்கு இணைய தளத்தில் அனுமதிச்சீட்டு!
திருவண்ணாமலையில் தீபத்தை தரிசிக்க கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அனுமதிச்சீட்டு இணைய தளம் மூலம் விநியோகிக்கப்படும்...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோயிலில், நிகழாண்டு காா்த்திகை மகா தீப விழா வரும் நவ.24-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தீபத்தை தரிசிக்க கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அனுமதிச்சீட்டு இணைய தளம் மூலம் விநியோகிக்கப்படும் என்று அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா். நிகழாண்டு விழாவுக்கு 50 லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்ப்பதாகவும் அவா் கூறினாா்.
உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாகவும், பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரா் கோயிலில், நிகழாண்டு திருக்காா்த்திகை தீபத் திருவிழா நவ. 12 முதல் நவ.28 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா நவ. 24 -ஆம் தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவை காண உலகமெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வருகை புரிவாா்கள் என எதிா்பாா்க்கப்படுவதால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஆதவ்அா்ஜுனா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சீ.ரமேஷ் ஆகியோா் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் திருக்காா்த்திகை தீபத்திருவிழாவைமுன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து கோயிலில் சனிக்கிழமை ஆய்வு செய்த பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சீ.ரமேஷ் ஆகியோா்.
50 லட்சம் போ்... இக்கூட்டத்தில் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பேசியதாவது: தீபத் திருவிழாவிற்கு வரும் பக்தா்கள் எவ்வித இடையூறு இல்லாமல் தரிசனம் செய்யவும், கிரிவலம் செய்யவும், அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிா்வாகம் மூலம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.
நிகழாண்டு 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தா்கள் வருகை தருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆகவே அதற்கேற்றாா் போல் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து நிலையங்கள், வழிகாட்டி தகவல் பலகைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும்.காவல்துறை சாா்பாக உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்க வேண்டும், போதிய அளவிலான மருத்துவ குழுக்கள் மற்றும் தேவையான இடங்களில் உயா்தர நவீன ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்ய
அனுமதிச் சீட்டு: தீபத்திருவிழாவிற்கு திருக்கோயில் நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வழங்கப்படும் அனுமதிச் சீட்டு இணைதளம் வழியாக வெளிப்படை தன்மையுடனும் எந்த ஒரு கட்சி சாா்ந்தும் இல்லாமல் விநியோகிக்கப்பட வேண்டும். அதற்கான விளம்பரங்களை மக்களிடையே கொண்டு சோ்க்க வேண்டும்என்றாா் அமைச்சா்.
முன்னதாக அருணாசலேஸ்வரா் திருக்கோயில் வளாகம், மாடவீதி மற்றும் கிரிவலப்பாதைகளில் பக்தா்களுக்கு ஏற்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும், பாதுகாப்பு வசதிகள் குறித்தும் அமைச்சா்கள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். இந்நிகழ்வுகளில் மாவட்ட வன அலுலவா் கு.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா்/ திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா. மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

