கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பணப் பயன்களையும் 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலாக்க வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். இதனால் மாவட்டத்தில் தபால் சேவை, அஞ்சலக சேமிப்புக் கணக்கு சேவைகள் பாதிக்கப்பட்டன.
மத்திய அரசின் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, நாடு முழுவதும் உள்ள கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்துவித பணப்பயன்களையும் 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என கமலேஷ் சந்திரா தலைமையிலான ஊதியக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆனால், தபால் துறை நிர்வாகம் அதை 2018 ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
அத்துடன், ஓய்வு பெறும் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கான பணிக்கொடை ரூ. 5 லட்சம் என்பதை ரூ. 1.50 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 30 நாள்கள் ஊதியத்துடன்கூடிய விடுப்பும், இந்த விடுப்புகளை மறு ஆண்டுகளுக்கு சேமித்து வைத்து ஓய்வு பெறும்போது 180 நாள்களுக்கு பணப்பயனாகப் பெற்றுக்கொள்ளும் உத்தரவும் மறுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகளால் 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஓய்வு பெற்ற ஊழியர்கள் உள்பட அனைத்து கிராமிய அஞ்சல் ஊழியர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அஞ்சல் துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் (ஏஐடிஜிடிஎஸ்யு), தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் (என்யுஜிடிஎஸ்) இணைந்து நடத்தும் இந்தப் போராட்டத்தையொட்டி, வேலூர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாவட்டம் முழுவதும் தபால் சேவைகளும், அஞ்சலக சேமிப்புக் கணக்கு சேவைகளும் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டன.
வேலைநிறுத்தத்தையொட்டி, வேலூர் கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலூர் தலைமை தபால் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். கோட்டத் தலைவர்கள் எஸ்.மூர்த்தி (ஏஐடிஜிடிஎஸ்யு), ஜி.திருவேங்கடம் (என்யுஜிடிஎஸ்) ஆகியோர் தலைமை வகித்தனர்.
கோட்டச் செயலர்கள் வி.முனிரத்தினம் (ஏஐடிஜிடிஎஸ்யு), எஸ்.கோவிந்தராஜ் (என்யுஜிடிஎஸ்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தப் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்றனர்.
அரக்கோணத்தில்...
அரக்கோணம் தலைமை அஞ்சல் நிலைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க அரக்கோணம் கோட்டத் தலைவர் ஆனந்தன், செயலர் துரைகுமார், தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க அரக்கோணம் கோட்டத் தலைவர் அர்ச்சுனன், செயலர் லோ.முத்தமிழன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘தவெக அரசின் 100 நாள் ஆட்சி மக்களுக்கு வேதனையான நாள்கள்’

வேளாண் கடன்கள்: திருவண்ணாமலையில் விவசாயிகள் சாலை மறியல்

வேலூா் - ஆற்காடு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பயணிகள் நிழற்குடையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


