
ஆசிரியர் பணி என்பது மகத்தான சேவை என்று பேராசிரியர் ரத்தின நடராசன் கூறினார்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தினமணி இணைந்து நடத்திய ஆசிரியர் தினவிழா திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் ரத்தின நடராசன் பேசியதாவது:
ஆசிரியர் பணி என்பது மகத்தான சேவை. களி மண்ணை யாரும் விரும்புவதில்லை. ஆனால், அந்த மண்ணைக் கொண்டு பிள்ளையாராகப் பிடித்து வணங்குகிறோம். அதுபோல், மாணவர்களின் திறன் வெளிவருவதற்கு முக்கியக் காரணமாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர். படிக்கும்போது, கல்வி அறிவோடு நல்ல பழக்க வழக்கங்களையும் மாணவர்கள் கற்க வேண்டும்.
நான் ராதாகிருஷ்ணனின் மாணவரான அப்துல் காதரின் மாணவர் என்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். எனவே, மாணவர்கள் நன்கு படித்து தங்களுக்கு படிப்பை வழங்கிய ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பதே முதல் கடமையாக கொண்டிருக்க வேண்டும் என்றார் அவர்.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் ப.பாமா தலைமை வகித்தார். வணிகவியல் துறைப் பேராசிரியை ரூபா வரவேற்றார். தமிழ்த் துறைப் பேராசிரியர் செளந்தரவல்லி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் கம்பன் கழகத் துணை அமைப்பாளர் சூரியக்குமார், கல்லூரிப் பேராசியர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
குடியாத்தத்தில்...
குடியாத்தம், செப். 5: குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை எம். கீதா தலைமை வகித்தார். சிறந்த ஆசிரியர்களுக்கும், கடந்த பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ஜே.கே.என்.பழனி பரிசுகள் வழங்கிப் பேசினார். நிலவள வங்கி துணைத் தலைவர் எஸ்.சுரேஷ்பாபு, கூட்டுறவு வீட்டுவசதி கடன் சங்கத் துணைத் தலைவர் எஸ்.சேட்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நெல்லூர்பேட்டை அம்பாலால் ஜெயின் சரஸ்வதி மெட்ரிக். வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் ஹீராலால் ஆர்.சந்சேத்தி தலைமை வகித்தார்.
முதல்வர் வி.தாரா வரவேற்றார். ஆசிரியர் தினம் குறித்து துணைத் தாளாளர் கே.எம்.இ.கருணாகரன், கல்வி ஒருங்கிணைப்பாளர் துரை. பத்மநாபன் ஆகியோர் பேசினர். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாதபூஜை நடத்தி
ஆசி பெற்றனர். நடுப்பேட்டை புங்கனூர் அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. துணை முதல்வர் என். செஞ்சுடர், உதவி முதல்வர் எஸ். பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளிகொண்டா சிக்ஷா கேந்திரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைவர் பி.என்.எஸ். திருநாவுக்கரசு தலைமை வகித்தார். முதல்வர் ஜெ.சுஹாசினி வரவேற்றார். பள்ளிக் கல்வி ஆலோசகர் ஜி. திருநாவுக்கரசு கேக் வெட்டி ஆசிரியர்களுக்கு வழங்கினார்.
ஆசிரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளித் தாளாளர் டி. குகன், ஐ.சி.எஸ்.ஈ. பள்ளி முதல்வர் எல். பிராங்கிளின்தேசாய், மெட்ரிக். பள்ளி முதல்வர் எம்.அலங்காரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரக்கோணத்தில்...
அரக்கோணம் நகராட்சி போலாட்சியம்மன் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் மரியஜெயசீலி தலைமை வகித்தார். விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலர்கள் எஸ்.ஆர்.பால்ராஜ், கோ.இந்திரா ஆகிய இருவரும் வழங்கினர். முன்னதாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகளை மாணவ, மாணவிகள்
வரவேற்றனர்.
ராணிப்பேட்டையில்...
திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தின விழா மற்றும் வ.உ.சி.யின் 147-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, தலைமை வகித்து, திருவள்ளுவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.முருகன் பேசியதாவது:
ஆசிரியராய் வாழ்க்கையைத் தொடங்கி நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பள்ளி, கல்லூரி படிப்பு படித்த மாவட்டம் வேலூர் என்பதில் நமக்கு பெருமை. அதிலும் குறிப்பாக, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் வேலூர் ஊரிஸ் கல்லூரியில் அவர் படித்தார் என்பதில் பல்கலைக்கழகத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. மாணவர்கள் அவரைப் போல் சிறந்த கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்றார் அவர்.
விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் வெ.பெருவழுதி, தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பி.செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள் சையத் சபி, தண்டபாணி, நூலகர் விநாயகமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினார்.
விலங்கியல் துறை இணைப் பேராசிரியர் க.சிங்காரவேலு, உயிரி தொழில்நுட்பவியல் துறை உதவிப் பேராசிரியர் அ.ராஜசேகர், பல்கலைக்கழக நாட்டுநலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ம.செந்தில்குமார், பொருளியல் துறை உதவிப் பேராசிரியர் சென்னகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ராமாநுஜர் ஆன்மிக அறக்கட்டளையில்...
ராணிப்பேட்டை ராமாநுஜர் ஆன்மிக அறக்கட்டளையில் கிருஷ்ண ஜயந்தி விழா மற்றும் ஆசிரியர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு ராமாநுஜர் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனர் கே.வெங்கடேசன் தலைமை வகித்தார். அறக்கட்டளை ஆலோசகர் பி.என்.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி நிர்வாகி ஜெய்ஸ்ரீ கோதை வரவேற்றார். வழக்குரைஞர் என்.எஸ்.சேதுமாதவன் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
தொடர்ந்து, சிறப்பாக பணி செய்து வரும் ஆசிரியர், ஆசிரியைகளின் பணிகளைப் பாராட்டி அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் சான்று வழங்கப்பட்டன. இதில் ஆன்மிக அறக்கட்டளை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஆற்காட்டில்...
ஆற்காடு எஸ்எஸ்எஸ் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரித் தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்தார். பொருளாளர் ஏ.என்.சரவணன், நிர்வாக அறங்காவலர் ஏ.என்.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ஏ.என்.சங்கர் வரவேற்றார்.
விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்துக்கு ஆசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கல்லூரிப் பேராசிரியர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
ஆற்காடு நகாரட்சி தோப்புகானா தெற்கு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் கு.சரவணன் தலைமை வகித்தார். பொருளாளர் பாஸ்கரன், புலவர் முத்துகுப்புசாமி, நண்பர்கள் நலக் குழு நிறுவனர் எஸ்.வி. புருசோத்தமன், தலைவர் பி.எல் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் மணிவண்ணன்
வரவேற்றார்.
ஆற்காடு வட்டாட்சியர் சுமதி, இந்திய செஞ்சிலுவை சங்க ஆற்காடு வட்டக் கிளைச் செயலாளர் கே.எஸ் ரகுநாதன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர். இதில், செயலாளர் பி.வெங்கடேசன், பொருளாளர் ஜெயமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





