
வடகிழக்குப் பருவ மழையையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிக்கரைகள், நீர்நிலைகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்குப் பருவ மழையையொட்டி, வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்த ஆய்வுக் கூட்டம் வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் பேசியதாவது: வடகிழக்குப் பருவ மழையையொட்டி, ஏரிக்கரைகள், நீர்வழித் தடங்கள், மணல் மூட்டைகள், பிளீச்சிங் பவுடர், மருந்து மாத்திரைகள், பள்ளிகள், சமுதாயக் கூடங்கள், பாலங்கள், கல்வெட்டுகள், பாதுகாப்பு உபகரணங்கள், மின்பாதைகள், மின்மாற்றிகள், சாலைகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்கூட்டியே அவற்றின் உறுதித் தன்மைகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் 2 மாதங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களையும், சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான பொருள்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள மழை மானிகளின் தற்போதைய நிலை குறித்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் தணிக்கை செய்ய வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகள் குறித்து வரைபடங்கள் தயாரித்து அறிக்கை சமர்ப்பிக்கவும், அவற்றின் தினசரி நிலையைக் கண்காணிக்கவும் வேண்டும்.
வட்டாட்சியர்கள் தங்கள் பகுதியிலுள்ள பொக்லைன் இயந்திரங்கள், மரம் வெட்டும் கருவிகள், கழிவுகளை வெளியேற்ற தேவையான லாரிகள், வெள்ளப்பகுதிகளில் மீட்பதற்கான படகுகள், நீர்நிலைகளில் ஏற்படும் உடைப்புகளைச் சரிசெய்ய தேவையான மணல் மூட்டைகள், தேங்கும் நீரை வெளியேற்ற தேவையான மோட்டார் பம்புகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். பொதுப் பணித் துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் தங்களது பணிகள் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பார்த்திபன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






